ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த பெண்ணின் கால் துண்டானது
ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த பெண்ணின் கால் துண்டானது. இன்னொரு சம்பவத்தில் கல்லூரி மாணவி உயிர் தப்பினார்.
மும்பை,
மேற்கு ரெயில்வே வழித்தடத்தில் உள்ள சர்னிரோடு ரெயில் நிலையத்தில் இருந்து நேற்றுமுன்தினம் பெண் ஒருவர் விரைவு மின்சார ரெயிலில் பயணம் செய்தார். அந்த ரெயிலில் கூட்ட நெரிசல் அதிகமாக இருந்ததால் அவர் வாசற்படியில் நின்று கொண்டு பயணம் செய்தார்.
ரெயில் கிராண்ட்ரோடு அருகே வந்து கொண்டிருந்த போது திடீரென அந்த பெண் கைப்பிடி நழுவி ஓடும் ரெயிலில் இருந்து கீழே விழுந்தார். அப்போது அவர் துரதிருஷ்டவசமாக ரெயில் சக்கரத்தில் சிக்கி கொண்டார்.
இதில் அவரது ஒரு கால் துண்டானது. அவர் ரத்த வெள்ளத்தில் துடித்து கொண்டிருந்தார். இதை பார்த்து அதிர்ந்த பயணிகள் ரெயில்வே போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்த பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு அந்த பெண்ணுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விசாரணையில் அந்த பெண் பெயர் நீலு தின்கர் (வயது32) என்பதும், வேலை முடிந்து வீடு திரும்பும் போது இந்த விபத்தில் சிக்கியதும் தெரியவந்தது. சம்பவம் குறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல மெயின் வழித்தடத்தில் நேற்றுமுன்தினம் நாகுர் – பாண்டுப் இடையே மின்சார ரெயில் சென்றுகொண்டிருந்த பிரதிக்ஷா (17) என்ற கல்லூரி மாணவி கையில் இருந்து நழுவிய செல்போனை பிடிக்க முயன்ற போது ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்தார். இதில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இருப்பினும் தலையில் ஏற்பட்ட காயத்திற்காக அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.