எம்.எல்.ஏ.க்களுக்கு தங்க நாணயம் கொடுப்பதாக நான் சொல்லவில்லை சபாநாயகர் கே.பி.கோலிவாட் பேட்டி


எம்.எல்.ஏ.க்களுக்கு தங்க நாணயம் கொடுப்பதாக நான் சொல்லவில்லை சபாநாயகர் கே.பி.கோலிவாட் பேட்டி
x
தினத்தந்தி 17 Oct 2017 10:02 PM GMT (Updated: 17 Oct 2017 10:02 PM GMT)

விதான சவுதா வைர விழாவில் எம்.எல்.ஏ.க்களுக்கு தங்க நாணயம் கொடுப்பதாக நான் சொல்லவில்லை என்று சபாநாயகர் கே.பி.கோலிவாட் கூறினார்.

பெங்களூரு,

கர்நாடக சட்டசபை சபாநாயகர் கே.பி.கோலிவாட் பெங்களூருவில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–

விதான சவுதா வைர விழா கொண்டாட்டத்திற்கு ரூ.26 கோடி செலவு ஆகும் என்று திட்டமிட்டுள்ளோம். இதுகுறித்து அனுமதிக்காக நிதித்துறைக்கு வரைவு அறிக்கையை அனுப்பியுள்ளோம். நிதித்துறை எவ்வளவு நிதி ஒதுக்குகிறதோ அதன் அடிப்படையில் விழாவை நடத்தி முடிப்போம். இந்த விழா குறித்து மந்திரிசபையில் விவாதிக்க வேண்டும் என்று சட்டத்தில் எங்கும் சொல்லவில்லை.

இது சட்டசபையின் நிகழ்ச்சி. இந்த விழா குறித்து மந்திரிசபையில் முடிவு எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. நினைவு பரிசாக எம்.எல்.ஏ.க்களுக்கு தங்க நாணயம் மற்றும் ஊழியர்களுக்கு வெள்ளி தட்டு வழங்கும் திட்டம் எதுவும் இல்லை. அவ்வாறு நான் எதுவும் சொல்லவில்லை. அந்த செய்தி எப்படி பரவியது என்பது எனக்கு தெரியவில்லை.

முதலீட்டாளர் மாநாட்டிற்கு ஒரே நாளைக்கு ரூ.54 கோடி செலவு செய்யப்பட்டது. முன்பு ஜனாதிபதியாக இருந்த அப்துல் கலாம் இங்கு வந்தபோது எம்.எல்.ஏ.க்களுக்கு ரூ.50 ஆயிரம் மதிப்பில் மடிக்கணினி வழங்கப்பட்டது. அதற்கு ரூ.1½ கோடி செலவானது. அப்போது யாரும் இதுபற்றி கேள்வி கேட்கவில்லை. விழா பற்றி சித்தராமையாவுக்கு தெரிவித்து உள்ளோம். அவ்வாறு இருக்கும்போது அரசுக்கும், தலைமை செயலகத்திற்கும் இடையே இடைவெளி எதுவும் இல்லை.

இந்த விழா பற்றி சட்டசபை விவகாரத்துறை மந்திரிக்கு தகவல் தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை. கூட்டத்தொடர் நடக்கும்போது அரசு சார்பில் பதில் அளிக்க வேண்டியது அவரது கடமை. மற்றபடி மற்ற மந்திரிகளை போல தான் அவரும் கருதப்படுவார். இந்த விழா நடைபெறுவது எங்கள் துறை சார்ந்தது. இதுபற்றி நாங்கள் முடிவு எடுத்துள்ளோம்.

இந்த விழாவுக்கு யாரும் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை. ஊடகங்களில் வரும் தவறான தகவல்களை வைத்து எம்.எல்.ஏ.க்கள் பேசுகிறார்கள். அவர்களுக்கு தகவல் பற்றாக்குறை உள்ளது. எனக்கு எதிராக சிலர் சதி செய்கிறார்கள். இதில் மூடிமறைக்க ஒன்றும் இல்லை. இந்த விழாவையொட்டி அர்த்தப்பூர்வமான விவாதம் நடைபெற வேண்டும் என்ற நோக்கத்தில் கூட்டத்தொடர் நடைபெறும்போது மாநிலத்தின் மொழி, நீர், நிலம் குறித்து விவாதிக்க 3 மணி நேரம் ஒதுக்க முடிவு செய்தோம்.

ஆனால் அரசோ பல்வேறு மசோதாக்களை கொண்டுவருவதாக கூறியுள்ளது. விதான சவுதாவை போன்ற அற்புதமான கட்டிடம் இந்த உலகில் எங்கும் இல்லை. இந்த வைர விழாவுக்கு ஜனாதிபதியை அழைத்துள்ளோம். விழா நடத்துவதில் எனது தனிப்பட்ட நோக்கம் இல்லை. பணம் கொஞ்சம் கூடுதலாக செலவு ஆகலாம். ஆனால் கர்நாடகத்தின் மரியாதையை காப்பாற்றும் பணியை நான் செய்து வருகிறேன்.

இவ்வாறு கே.பி.கோலிவாட் கூறினார்.


Next Story