வால்பாறையில் கிறிஸ்தவ ஆலயம்,ரேஷன் கடை சுவரை இடித்து காட்டுயானைகள் அட்டகாசம்


வால்பாறையில் கிறிஸ்தவ ஆலயம்,ரேஷன் கடை சுவரை இடித்து காட்டுயானைகள் அட்டகாசம்
x
தினத்தந்தி 18 Oct 2017 4:30 AM IST (Updated: 18 Oct 2017 3:33 AM IST)
t-max-icont-min-icon

வால்பாறையில் கிறிஸ்தவ ஆலயம்,ரேஷன் கடை சுவரை இடித்து காட்டுயானைகள் அட்டகாசம் செய்தன. இதனால் தோட்ட தொழிலாளர்கள் ஓட்டம் பிடித்தனர்.

வால்பாறை,

வால்பாறை பகுதியில் பல்வேறு எஸ்டேட் பகுதிகளை ஒட்டிய வனப்பகுதிகளுக்கு கேரள வனப்பகுதியிலிருந்து காட்டுயானைகள் கூட்டம் கூட்டம் கூட்டமாக வரத்தொடங்கிவிட்டன. இந்த நிலையில் பன்னிமேடு எஸ்டேட் பகுதியில் முகாமிட்டிருந்த 6 யானைகள் நேற்று முன்தினம் நள்ளிரவில் பன்னிமேடு எஸ்டேட் பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தன.

அங்குள்ள சி.எஸ்.ஐ. கிறிஸ்தவ ஆலய சுவரை இடித்து உள்ளே துதிக்கையை விட்டு தேடின. ஆனால் ஆலயத்துக்குள் எதுவும் இல்லை என்றதால் அங்கிருந்து சென்று, அருகில் உள்ள ரேஷன் கடையின் சுவரை இடித்து தள்ளி, அதற்குள் இருந்த அரிசி, சர்க்கரை, கோதுமை மூட்டைகளை தூக்கி வெளியே வீசி தின்று சேதப்படுத்தி அட்டகாசம் செய்தன. இதனால் பீதியடைந்த அந்த பகுதி மக்கள், தங்களது வீடுகளையும் இடித்து தள்ளி விடும் என்கிற பயத்தில் வீட்டில் இருந்து தப்பித்து, தேயிலைத் தோட்டத்திற்குள் போய் பதுங்கினர்.

தொழிலாளர்கள் ஓட்டம்

இந்த நிலையில் அந்த யானைகள் நேற்று பட்டபகலில் முக்கோட்டுமுடி எஸ்டேட் 2-வது பிரிவு பகுதியில் உள்ள 9-ம்நம்பர் தேயிலைத் தோட்டத்திற்குள் புகுந்தன. அப்போது அங்கு இலை பறிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் அலறியடித்துக்கொண்டு வேறு ஒரு தேயிலைத் தோட்டத்திற்குள் போய் பாதுகாப்பாக நின்றுகொண்டனர்.

இதனை தொடர்ந்து முக்கோட்டுமுடி எஸ்டேட் நிர்வாகத்தினர் லாரிகள் மூலம் அந்த பகுதியிலிருந்த தொழிலாளர்களை பாதுகாப்பாக வீடுகளுக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் மானாம்பள்ளி வனச்சரகர் சேகர் வேட்டைத்தடுப்பு காவலர்களுடன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றார். பின்னர் அவரது உத்தரவின் பேரில் காட்டுயானைகள் குடியிருப்புக்குள் நுழையாமல் இருக்க பன்னிமேடு எஸ்டேட் பகுதியில் கூடுதல் வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இது குறித்து அந்த பகுதி மக்கள் பீதியுடன் காணப்படுகின்றனர். இது குறித்து அவர்கள் கூறிய தாவது:-

நண்பர்கள் குழு

அடிக்கடி காட்டுயானைகளின் அட்டகாசம் அதிகரித்து வருவதால் பயத்திலிருந்து விடுபட முடியாமல் தொழிலாளர்களும் குழந்தைகளும் இருந்துவருகின்றனர். போதுமான வாகன வசதிகள் இல்லாததால் காட்டுயானைகள் குடியிருப்புக்குள் நுழைவதற்கு முன்னால் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தாலும் அவர்களால் உரிய நேரத்திற்கு வரமுடிவதில்லை. எனவே இது குறித்து ஆனைமலை புலிகள் காப்பக களஇயக்குனர், மாவட்ட வன அலுவலர் ஆகியோர் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கூடுதல் வன பணியாளர்களை போதிய வாகன வசதிகளுடன் பணியில் அமர்த்த வேண்டும். அனைத்து எஸ்டேட் பகுதிகளிலும் வனத்துறைக்கு உதவும் வனத்துறை நண்பர்கள் குழுவை ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள். 

Related Tags :
Next Story