பனப்பாக்கம் அருகே 50 வீடுகளில் மழைநீருடன் கழிவுநீர் புகுந்தது


பனப்பாக்கம் அருகே 50 வீடுகளில் மழைநீருடன் கழிவுநீர் புகுந்தது
x
தினத்தந்தி 18 Oct 2017 4:30 AM IST (Updated: 18 Oct 2017 3:35 AM IST)
t-max-icont-min-icon

பலத்த மழையால் பனப்பாக்கம் அருகே பொய்கைநல்லூர் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீருடன் கழிவுநீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.

பனப்பாக்கம்,

வேலூர் மாவட்டத்தில் கடந்த ஒன்றரை மாதத்துக்கு மேல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. இந்த நிலையில் பனப்பாக்கம் பகுதியில் நேற்று முன்தினம் மாலை முதல் பலத்த மழை பெய்தது.

பொய்கை நல்லூர் பகுதியில் இரவு வரை பெய்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. அங்குள்ள கழிவுநீர் கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டதன் காரணமாக மழைநீர் சாலையில் சென்றது. இந்த நிலையில் திடீரென அதிக அளவு வந்த தண்ணீர் கழிவுநீருடன் பொய்கைநல்லூர் விநாயகபுரம் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் புகுந்தது.

பொருட்கள் நாசம்

இதனால் வீடுகளில் வைத்திருந்த அரிசி, துணிமணிகள் மற்றும் பொருட்கள் மழைநீரில் நனைந்து நாசமாயின. வீடுகளுக்குள் இருந்த முதியவர்கள், குழந்தைகள் அமர்வதற்கு கூட இடமில்லாமல் தண்ணீரில் பரிதவித்தனர். உடனடியாக மழைநீரை வெளியேற்ற வேண்டும் என ஊராட்சி நிர்வாகத்துக்கு செல்போன் மூலம் தகவல் அளித்தனர். ஆனால் எந்த பலனும் இல்லை.

இதனால் வீடுகளுக்குள் மழைநீருடன் புகுந்த கழிவுநீரை பாத்திரங்கள் மூலம் அள்ளி வெளியேற்றிய வண்ணம் இருந்தனர். பல மணி நேர போராட்டத்துக்கு பிறகு அவர்கள் வீடுகள் மற்றும் வாசல் பகுதியில் இருந்த தண்ணீரை முழுவதுமாக வெளியேற்றினர்.

தூர்வார வேண்டும்

இது குறித்து அவர்கள் கூறுகையில் “கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. அதனை சீர் செய்தாலே மழைநீர் எளிதாக கால்வாயில் செல்லும். எனவே அதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர். 

Related Tags :
Next Story