பாகமண்டலாவில் உள்ள தலைக்காவிரியில் தீர்த்த உற்சவம் ஏராளமான பக்தர்கள் காவிரி தாயை வழிபட்டனர்


பாகமண்டலாவில் உள்ள தலைக்காவிரியில் தீர்த்த உற்சவம் ஏராளமான பக்தர்கள் காவிரி தாயை வழிபட்டனர்
x
தினத்தந்தி 17 Oct 2017 10:10 PM GMT (Updated: 17 Oct 2017 10:10 PM GMT)

பாகமண்டலாவில் உள்ள தலைக்காவிரியில் நேற்று தீர்த்த உற்சவம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு காவிரி தாயை வழிபட்டனர்.

குடகு,

கர்நாடக மாநிலம் குடகு மாவட்டம் மடிகேரி தாலுகா பாகமண்டலாவில் உள்ள காவிரியின் பிறப்பிடமான தலைக்காவிரியில் ஒவ்வொரு ஆண்டும் காவிரி தீர்த்த உற்சவம் நடைபெறுவது வழக்கம். அப்போது காவிரி ஆற்றுக்கும், காவிரி தாய்க்கும் விசே‌ஷ பூஜைகளை செய்து பக்தர்கள் வழிபடுவார்கள். மேலும் கோவில் அருகே உள்ள குளத்தில் பக்தர்கள் புனித நீராடியும், தீர்த்தத்தை குடங்கள் மற்றும் பாட்டில்களில் வீடுகளுக்கு பிடித்துச் சென்றும் மகிழ்வார்கள்.

தீர்த்த உற்சவத்தின்போது காவிரி தாய்க்கு தங்க நகைகள் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்படுவது வழக்கம். இந்த நகைகள் பாகமண்டலாவில் உள்ள பங்கண்டேஷ்வரா கோவிலில் இருந்து மேளதாளங்களுடன் ஊர்வலமாக தலைக்காவிரிக்கு கொண்டுவரப்படும். பின்னர் காவிரித் தாய்க்கு நகைகள் அணிவிக்கப்பட்டு, மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்படும்.

அதேபோல் இந்த ஆண்டும் தலைக்காவிரியில் தீர்த்த உற்சவம் நடந்தது. இதற்காக நேற்று முன்தினம் பங்கண்டேஷ்வரா கோவிலில் இருந்து நகைகள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டன. நேற்று காலை முதலே காவிரி தாய்க்கு சிறப்பு அபிஷேகங்களும், ஆராதனைகளும் நடந்தன. அதையடுத்து காவிரி தாய்க்கு தங்க நகைகள் அணிவிக்கப்பட்டு, மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது.

பின்னர் சரியாக மதியம் 12.33 மணிக்கு வேத, மந்திரங்கள் முழங்க காவிரி தாய்க்கு அர்ச்சகர்கள் சிறப்பு பூஜைகளை செய்தனர். அதையடுத்து மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு காவிரி தாயை வழிபட்டனர்.

பின்னர் அவர்கள் கோவில் அருகே உள்ள குளத்தில் புனித நீராடினர். மேலும் பக்தர்கள் குடங்களிலும், பாட்டில்களிலும் குளத்தில் இருந்து புனித நீரை தங்களது வீடுகளுக்கு பிடித்துச்சென்றனர்.

இந்த தீர்த்த உற்சவத்தில் கலந்து கொள்வதற்காக கர்நாடகத்தில் இருந்து மட்டுமல்லாது, கேரளா, ஆந்திரா, தமிழ்நாடு, மராட்டியம் உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். பக்தர்களின் வசதிக்காக மாவட்ட கலெக்டர் ரிச்சர்ட் வின்சென்ட் டிசோசா தலைமையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திர பிரசாத் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.


Next Story