கொருக்குப்பேட்டையில் கஞ்சா கேட்ட தகராறில் தொழிலாளி குத்திக்கொலை 2 பேர் கைது


கொருக்குப்பேட்டையில் கஞ்சா கேட்ட தகராறில் தொழிலாளி குத்திக்கொலை 2 பேர் கைது
x
தினத்தந்தி 20 Oct 2017 3:45 AM IST (Updated: 20 Oct 2017 1:17 AM IST)
t-max-icont-min-icon

கொருக்குப்பேட்டையில், கஞ்சா கேட்ட தகராறில் கூலி தொழிலாளி குத்திக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

ராயபுரம்,

சென்னை கொருக்குப்பேட்டை சுதந்திரபுரம் பகுதியை சேர்ந்தவர் அந்தோணிராஜ்(வயது 28). கூலி தொழிலாளி. இவருடைய மனைவி சித்ரா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

சித்ரா, கணவருடன் கோபித்துக்கொண்டு குழந்தைகளுடன் தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார். இதனால் அந்தோணிராஜ், தனியாக வசித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை அம்பேத்கர் நகர் மேம்பாலம் அருகே அந்தோணிராஜ் உடலில் ரத்தக்காயங்களுடன் சாலையில் பிணமாக கிடந்தார். இதை பார்த்த பொதுமக்கள், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்துக்கு சென்ற ஆர்.கே.நகர் போலீசார், அந்தோணிராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

அதில் நேற்று முன்தினம் அதிகாலை அந்தோணிராஜ், அம்பேத்கர் நகர் பகுதியில் நடந்து சென்றார். அப்போது அங்கு கொடுங்கையூரை சேர்ந்த சந்தோஷ்(24), கார்த்திக்(28) ஆகிய 2 பேரும் கஞ்சா அடித்தபடி இருந்தனர்.

இதை பார்த்த அந்தோணிராஜ், அவர்களிடம் தனக்கும் கஞ்சா கொடுக்கும்படி கேட்டார். ஆனால் அவர்கள் தர மறுத்ததால் அவர்களில் ஒருவரை அந்தோணிராஜ் தாக்கி உள்ளார்.

இதில் ஆத்திரம் அடைந்த 2 பேரும் சேர்ந்து தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் அந்தோணிராஜை சரமாரியாக குத்திக்கொலை செய்துவிட்டு தப்பி சென்றது விசாரணையில் தெரிய வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து கொடுங்கையூரில் பதுங்கி இருந்த சந்தோஷ் மற்றும் கார்த்திக்கை போலீசார் கைது செய்தனர். பின்னர் 2 பேரையும் ஜார்ஜ் டவுன் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.


Next Story