பஸ் கட்டண உயர்வினை முழுமையாக ரத்துசெய்ய வேண்டும் அ.தி.மு.க. வலியுறுத்தல்
பஸ் கட்டண உயர்வினை முழுமையாக ரத்துசெய்ய வேண்டும் என்று அ.தி.மு.க. வலியுறுத்தி உள்ளது.
புதுச்சேரி,
புதுவை அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
புதுவையில் பஸ் கட்டணத்தை உயர்த்தி அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இங்கு டீசல் விலை தமிழகத்தைவிட குறைவாகவே உள்ளது. தமிழகத்தில் பஸ் கட்டணம் கி.மீட்டருக்கு 42 காசாக உள்ளது. ஆனால் புதுவையில் 75 காசாக உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல் பஸ்களுக்கான காலாண்டு வரியும் தமிழகத்தைவிட மிகவும் குறைவுதான்.
இருந்தபோதிலும் உள்நோக்கத்தோடு கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. யாருடனும் இதுதொடர்பாக ஆலோசனை நடத்தாமல் கட்டண உயர்வினை மக்களிடம் திணித்து உள்ளனர். இதனை எப்படி கவர்னர் ஏற்றுக்கொண்டார்? எதெற்கெடுத்தாலும் பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டி கொடுக்கும் முதல்–அமைச்சர் இதனை மட்டும் ஆணையரை கொண்டு அறிவிக்க வேண்டிய அவசியமென்ன? முதல்–அமைச்சரும், சம்பந்தப்பட்ட துறை அமைச்சரும் எங்கே சென்றார்கள்?
புதுவையை ஆளும் காங்கிரஸ் அரசுக்கு மக்களைப்பற்றி கவலையில்லை. இந்த கட்டண உயர்வினை முழுமையாக ரத்து செய்யவேண்டும். காலாண்டு இருக்கை வரி, டீசல் விலை உள்ளிட்டவற்றை கவனத்தில் கொண்டு கட்டண உயர்வினை நேர்மையான முறையில் விதிக்க கவர்னர் நடவடிக்கை எடுக்கவேண்டும். இந்த விஷயத்தில் கவர்னர் தவறு செய்துள்ளார்.
கட்டண உயர்வில் முறைகேடு நடந்துள்ளது. அரசு பாராமுகமாக இருந்தால் ஏழை மக்கள் நலனுக்காக போராட்டத்தில் ஈடுபடுவோம்.
புதுவையில் வாழும் ஏழை மக்கள் பஸ் போக்குவரத்தையே பெரிதும் நம்பி உள்ளனர். உள்கட்டமைப்பை மேம்படுத்தி மாநிலத்தின் அனைத்து பகுதிகளுக்கும் அரசு போக்குவரத்து வசதியை இதுவரை செய்துதரவில்லை. இன்னும் பல கிராமப்பகுதி மக்கள் போக்குவரத்து வசதியின்றி அவதிப்படுகின்றனர். அரசின் தனியார்மய கொள்கையினால் தனியார் பஸ்களையே மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.இந்தநிலையில் தனியாருக்கு சாதமாக கூட்டு கொள்ளை அடிக்கும் நோக்குடன் பஸ் கட்டணத்தை 110 மடங்கு காங்கிரஸ் அரசு உயர்த்தியுள்ளது. இதை அ.தி.மு.க. சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம். இந்த பஸ் கட்டண உயர்வால் ஏழை மக்கள் மிகவும் கடுமையாக பாதிக்கப்படுவர். எனவே உயர்த்தப்பட்ட பஸ் கட்டணத்தை உடனடியாக வாபஸ் பெற வேண்டும்.
புதுவை அரசு சட்டம் ஒழுங்கு பற்றியும் துளியும் கவலைப்படவில்லை. சிறையிலேயே ஆண், பெண் கைதிகள் சந்தித்து பேசி வருகின்றனர். விவசாயிகளுக்காக போராடிய எம்.எல்.ஏ.வை போலீசார் தடியடி நடத்தி தாக்குகின்றனர். தற்போது வெடிகுண்டு கலாசாரமும் தலைதூக்கியுள்ளது. மேட்டுப்பாளையம் ராம்நகரில் 3 பேர் வெடிகுண்டு வீசி படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
இதுபோன்ற சம்பவங்கள் பொதுமக்கள் மத்தியில் பீதியையும், வேதனையையும் ஏற்படுத்தி உள்ளது. சுகாதாரமின்மை, தனியார்மய கொள்கை, சட்டம் ஒழுங்கு சீர்கேடு என புதுச்சேரியை பொட்டல்காடாக மாற்றி வருகிறது காங்கிரஸ்–தி.மு.க. கூட்டணி அரசு. மக்கள் நலனில் துளியும் அக்கறையின்றி முடங்கிப்போன இந்த அரசின் செயல்பாடு குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் விசாரணை நடத்தி கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் வையாபுரி மணிகண்டன் கூறியுள்ளார்.