டெங்குகொசுப்புழுக்கள் உற்பத்தி: வீடு- கடைகளின் உரிமையாளர்களுக்கு அபராதம்


டெங்குகொசுப்புழுக்கள் உற்பத்தி: வீடு- கடைகளின் உரிமையாளர்களுக்கு அபராதம்
x
தினத்தந்தி 20 Oct 2017 4:30 AM IST (Updated: 20 Oct 2017 3:19 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சையில் டெங்கு கொசுப்புழுக்கள் உற்பத்தியாக காரணமாக இருந்த வீடு, கடைகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்து தஞ்சை கலெக்டர் அண்ணாதுரை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.

தஞ்சாவூர்,

தஞ்சை மாநகராட்சி மற்றும் ஒன்றியப்பகுதிகளில் கலெக்டர் அண்ணாதுரை டெங்கு ஒழிப்பு நடவடிக்கை பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தஞ்சை ராசா மிராசுதார் அரசு மருத்துவமனை, மாவட்ட மைய நூலகம், வாணக்காரத்தெரு, வைக்கோல்காரத் தெரு, பழைய ராமேஸ்வரம் ரோடு, ரெட்டிபாளையம் புதுத்தெரு, ராமநாதபுரம் ஊராட்சி ஆகிய இடங்களில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் கலெக்டர் அண்ணாதுரை நிருபர்களிடம் கூறியதாவது:-

தஞ்சை மாவட்டத்தில் அனைத்து அரசுத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து, டெங்கு ஒழிப்பு பணியை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறார்கள். காய்ச்சல் என்று தெரிய வந்தால், பொதுமக்கள் அரசு மருத்துவமனை மற்்றும் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வந்து சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும். தஞ்சை மாவட்டத்தில் டெங்கு பாதிப்பால் 34 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளை சுற்றி 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. டெங்கு கொசு மற்றும் கொசுப்புழுக்கள் உற்பத்தியாக காரணமாக இருந்த நபர்களுக்கு அபராதம் விதித்தும், விளக்க அறிக்கை கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டு வருகிறது. இதுவரை ரூ.4 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

கலெக்டர் ஆய்வின் போது பழைய ராமேஸ்வரம் ரோடு பகுதியில் உள்ள ஒரு செருப்பு கடை பின்புறம் பசுபதி என்பவருக்கு சொந்தமான இடத்தில் பழைய டயர்களில் மழை நீர் தேங்கி கொசு மற்றும் கொசுப்புழு உற்பத்தியாவதை கண்டறிந்த கலெக்டர், டயர்களை பறிமுதல் செய்ய மாநகராட்சி அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். அதன்படி டயர்கள் பறிமுதல் செய்யப்பட்டு, கொசுப்புழு உற்பத்தியாவதை தடுக்க தவறிய பசுபதிக்கு ரூ.10,000 அபராதம் விதித்து, உடனடியாக வசூல் செய்ய மாநகராட்சி அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

வாணக்கார வைக்கோல்காரத் தெரு பகுதியில் சிர்கார் மேத்தா என்பவரின் வீட்டு மாடியில் கழிவறை பீங்கான்களில் கொசுப்புழு மற்றும் கொசுக்கள் உற்பத்தியாவதை கண்டறிந்த கலெக்டர் ரூ.500 அபராதம் விதித்தும், அதே நபருக்கு சொந்தமான கிரானைட் கடையில் பீங்கான்களில் கொசுப்புழுக்கள் உற்பத்தியாவதை கண்டறிந்து அக்கடைக்கு ரூ.500 அபராதமும் விதித்தார். மேலும் அந்த பகுதியில் இருந்த டயர் பஞ்சர் கடையில் பழைய டயரில் தண்ணீர் தேங்கியிருந்து கொசுப்புழு உற்பத்தியாவதை கண்டறிந்து அதன் உரிமையாளருக்கு ரூ.500, அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

ரெட்டிபாளையம் புதுத்தெரு பகுதியில் கஜேந்திரன் மற்றும் செல்வராஜ் ஆகியோர்களின் வீடுகளில் ஆட்டுக்கல் மற்றும் பழைய குடங்களில் மழை நீர் தேங்கி கொசுப்புழு உற்பத்தியாவதை கண்டறிந்து, அதனை அகற்ற உத்தரவிட்டதோடு, 2 பேருக்கும் தலா ரூ.50 அபராதம் விதித்து தஞ்சை வட்டார வளர்ச்சி அலுவலரை உடனடியாக வசூல் செய்ய உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின் போது சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர்.சுப்பிரமணியன், வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ், தாசில்தார் தங்கபிரபாகரன், அலுவலர்கள் மற்றும் டாக்டர்கள் உடன் இருந்தனர்.


Related Tags :
Next Story