மணப்பாறை பஸ்நிலையத்தில் சிமெண்டு பூச்சு இடிந்து விழுந்ததால் பயணிகள் அலறியடித்து ஓட்டம்


மணப்பாறை பஸ்நிலையத்தில் சிமெண்டு பூச்சு இடிந்து விழுந்ததால் பயணிகள் அலறியடித்து ஓட்டம்
x
தினத்தந்தி 20 Oct 2017 4:15 AM IST (Updated: 20 Oct 2017 3:21 AM IST)
t-max-icont-min-icon

மணப்பாறை பஸ் நிலையத்தில் தீபாவளியன்று திடீரென சிமெண்டு பூச்சு இடிந்து விழுந்ததால் அங்கிருந்த பயணிகள் அலறியடித்து கொண்டு ஓட்டம் பிடித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

மணப்பாறை,

மணப்பாறையில் ரூ.5 கோடியே 10 லட்சம் செலவில் பஸ் நிலையம் விரிவாக்கம் செய்யப்பட்டு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தான் திறப்பு விழா நடைபெற்றது. இதில் 27 கடைகள் உள்ளன. இந்நிலையில் பஸ் நிலையத்திற்குள் உள்ள போக்குவரத்து கழக அறை அருகே உள்ள இரண்டு தூண்கள் உள்ள இடத்தின் கான்கிரீட் பகுதியில் விரிசல் ஏற்பட்டு மழை நேரத்தில் அதன் வழியாக தண்ணீர் வடியும். தற்போது அந்த விரிசல் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

சிமெண்டு பூச்சு இடிந்து விழுந்தது

இந்நிலையில் நேற்று முன்தினம் தீபாவளியன்று போக்குவரத்து கழக அறை அருகே சிமெண்டு தூண்களின் முன்பு இருந்த சிமெண்டு பூச்சு திடீரென இடிந்து விழுந்தது. இதுமட்டுமின்றி தூணின் பின் பகுதியிலும் சிமெண்டு பூச்சு விழுந்தது. சிமெண்டு பூச்சு இடிந்து விழுந்த போது அங்கிருந்த பயணிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

மேலும் பஸ் நிலையத்தில் உள்ள சிமெண்டு தூண் ஒன்று மிகவும் சேதமடைந்து உள்ளது. இதனால் பஸ் நிலையத்தில் நிற்கவே பயணிகள் அச்சமடைந்துள்ளனர். கட்டி முடிக்கப்பட்ட 3 மாதங்களில் பஸ் நிலையத்தின் சிமெண்டு பூச்சு இடிந்து விழுந்த சம்பவம் சமூக ஆர்வலர்களை வேதனைடையச் செய்துள்ளது. இடிந்து விழும் சிமெண்டு பூச்சுகளை உடனடியாக சரிசெய்வதுடன் மேலும் சேத மடைந்த பகுதிகளையும் சரிசெய்திட வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Related Tags :
Next Story