மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும் எம்.எல்.ஏ. வேண்டுகோள்


மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும் எம்.எல்.ஏ. வேண்டுகோள்
x
தினத்தந்தி 20 Oct 2017 4:15 AM IST (Updated: 20 Oct 2017 3:22 AM IST)
t-max-icont-min-icon

தமிழக அரசு மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. வேண்டுகோள்

நாகர்கோவில்,

நாகர்கோவில் தொகுதி எம்.எல்.ஏ. சுரேஷ்ராஜன் தனது தொகுதிக்குட்பட்ட பஞ்சாயத்துகள், பேரூராட்சி பகுதிகளில் மக்களை நேரடியாக சந்தித்து குறைகளை கேட்டார். இதேபோல் கணபதிபுரம் பேரூராட்சி பகுதிகளில் அவர் மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். அப்போது அப்பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள், “சாலை வசதி சரியாக இல்லை. தங்கள் பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணி சரியாக நடைபெறவில்லை. இதனால் டெங்கு காய்ச்சல் பரவும் சூழ்நிலை இருந்து வருகிறது. குப்பைகளை சரியாக அகற்றுவது இல்லை. தெருவிளக்குகள் சரியாக எரிவதில்லை” என பல்வேறு குறைகளை வாய்மொழியாகவும், மனுக்களாகவும் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ.விடம் எடுத்துக் கூறினர். அதற்கு அவர், தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து செய்யக்கூடிய அடிப்படை வசதிகளை செய்து தருவதாக உறுதி அளித்தார். பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கணபதிபுரம் பேரூராட்சி பகுதியில் அடிப்படை வசதிகள் கேட்டு பலர் புகார் தெரிவித்து, மனுக்கள் கொடுத்துள்ளனர். உள்ளாட்சித் தேர்தல் நடந்திருந்தால், மத்திய அரசு நிதி அதிக அளவு வந்திருக்கும். தற்போது அந்த நிதியும் வரவில்லை. தமிழக அரசும் உள்ளாட்சிகளுக்கு நிதி ஒதுக்கவில்லை. தோல்வி பயத்தால் உள்ளாட்சித்தேர்தலை தமிழக அரசு நடத்தாமல் இருக்கிறது. எனவே உடனடியாக இந்த தேர்தலை நடத்த வேண்டும். தேர்தல் நடத்தாததால் அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படாமல், முடங்கியுள்ளன. மத்திய அரசு உள்ளாட்சிகளுக்கு நிதி வழங்க வேண்டும். தமிழக அரசு மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். அரசிடமும், மாவட்ட நிர்வாகத்திடமும் கோரிக்கைகளை நிறைவேற்ற சண்டை போட வேண்டியுள்ளது. மக்களை சந்தித்து கோரிக்கைகள் பெறுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த பகுதியில் பேரூராட்சி நிர்வாகம் அடிப்படை வசதிகளை நிறைவேற்றிக் கொடுக்காவிட்டால் கணபதிபுரம் பேரூராட்சியை கண்டித்து மக்களைத் திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்றார். அவருடன் தி.மு.க. ஒன்றிய செயலாளர் சற்குருகண்ணன், பேரூர் செயலாளர் எழில்பிரபா, நாஞ்சில் மணி, டேனியல்ராஜன், சாகுல் ஹமீது உள்பட பலர் உடன் சென்றிருந்தனர். 

Related Tags :
Next Story