மோட்டார் சைக்கிளில் மெதுவாக செல்லும்படி கூறிய வாலிபரின் மண்டை உடைப்பு
மோட்டார் சைக்கிளில் மெதுவாக செல்லும்படி கூறிய வாலிபரை, இரும்பு கம்பியால் தாக்கி மண்டையை உடைத்தவரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர். அசுர வேகம் மும்பை செம்பூர் தக்கர்பப்பா காலனியில் உள்ள பசந்த்நகரை சேர்ந்தவர் சுஷில் தேஜாராம்(வயது25). இவர் சம்பவத்தன்று இ
மும்பை,
மோட்டார் சைக்கிளில் மெதுவாக செல்லும்படி கூறிய வாலிபரை, இரும்பு கம்பியால் தாக்கி மண்டையை உடைத்தவரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
மும்பை செம்பூர் தக்கர்பப்பா காலனியில் உள்ள பசந்த்நகரை சேர்ந்தவர் சுஷில் தேஜாராம்(வயது25). இவர் சம்பவத்தன்று இரவு குர்லாவில் இருந்து மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டிருந்தார். குர்லா நேருநகர் பகுதியில் வந்தபோது, அந்த வழியாக ஒருவர் மோட்டார் சைக்கிளில் அசுர வேகத்தில் சென்றார். இதை கவனித்த சுஷில் தேஜாராம் உடனே அந்த மோட்டார் சைக்கிளை பின்தொடர்ந்து விரட்டிச்சென்றார்.
மோட்டார்சைக்கிளை நெருங்கியதும் அதை ஓட்டி வந்தவரிடம், ஏன் இவ்வளவு வேகத்தில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச்செல்கிறீர்கள்.
வேகமாக சென்று விபத்தில் சிக்கவா? மெதுவாக ஓட்டி செல்லுங்கள் என்று கூறியுள்ளார்.
இது மோட்டார் சைக்கிளை ஓட்டிச்சென்றவருக்கு ஆத்திரத்தை உண்டாக்கியது. அவர் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு சுஷில் தேஜாராமிடம் தகராறில் ஈடுபட்டார். இந்த தகராறு முற்றியதில் ஆத்திரம் அடைந்த அந்த நபர் திடீரென மோட்டார் சைக்கிளில் இருந்த இரும்பு கம்பியை எடுத்து சுஷில் தேஜாராமின் தலையில் பலமாக தாக்கினார். மேலும் கற்களை வீசியும் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்று விட்டார். இரும்பு கம்பியால் தாக்கியதில் சுஷில் தேஜாராமின் மண்டை உடைந்து ரத்தம் சொட்டியது.
படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ராஜவாடி மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்த புகாரின் பேரில் நேருநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுஷில் தேஜாராமின் மண்டையை உடைத்த அடையாளம் தெரியாத ஆசாமியை வலைவீசி தேடி வருகின்றனர்.