கொளப்பாக்கத்தில் தனியார் நிறுவனத்தில் வி‌ஷவாயு தாக்கி 2 பேர் பலி


கொளப்பாக்கத்தில் தனியார் நிறுவனத்தில் வி‌ஷவாயு தாக்கி 2 பேர் பலி
x
தினத்தந்தி 21 Oct 2017 5:15 AM IST (Updated: 21 Oct 2017 1:12 AM IST)
t-max-icont-min-icon

கொளப்பாக்கத்தில் தனியார் நிறுவனத்தில் கழிவுநீர் தொட்டியில் இறங்கி சுத்தம் செய்ய முயன்றபோது வி‌ஷவாயு தாக்கி 2 தொழிலாளர்கள் பரிதாபமாக இறந்தனர்.

பூந்தமல்லி,

சென்னை சூளைமேட்டை சேர்ந்தவர் மோகனரங்கன். போரூரை அடுத்த கொளப்பாக்கத்தில் இவருக்கு சொந்தமான நிறுவனம் உள்ளது. இங்கு சிமெண்ட் பைகள் மற்றும் சிமெண்ட் கோணிப் பைகளை எந்திரத்தில் அரைத்து அதன் மூலம் சிமெண்ட் ஓடுகள் தயாரிப்பதற்கு தேவையான மூலப்பொருட்களை தயாரித்து கொல்கத்தா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

இங்கு வடமாநிலங்களைச் சேர்ந்த 20–க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், அங்கேயே தங்கி வேலை செய்து வருகின்றனர்.

கோணிப் பைகளை அரைக்கும் போது அதில் இருந்து வெளியேறும் கழிவுநீரை தேக்கி வைக்க, தனியார் நிறுவனத்தின் உள்ளே 8 அடி ஆழமும், 10 அடி அகலமும் கொண்ட 4 தரைமட்ட கழிவுநீர் தொட்டிகள் உள்ளன.

அந்த நிறுவனத்தில் தங்கி பணிபுரிந்து வந்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ஊழியர்கள் சந்திர துவாஜ பிஜோய்(வயது 22), சுதர்சன் பிரதான்(24) ஆகிய இருவரும் நேற்று காலை அந்த கழிவுநீர் தொட்டி ஒன்றில் இறங்கி கழிவுகளை சுத்தம் செய்ய முயன்றனர்.

அப்போது அவர்கள் இருவரையும் வி‌ஷவாயு தாக்கியது. மூச்சுவிட முடியாமல் திணறிய 2 பேரும் தொட்டிக்கு உள்ளேயே மயங்கி விழுந்தனர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சக ஊழியர்கள், தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்துக்கு விருகம்பாக்கம் தீயணைப்பு நிலைய அதிகாரி ஆரிபா தலைமையில் பூந்தமல்லி, விருகம்பாக்கம் ஆகிய பகுதிகளில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். பின்னர் தீயணைப்பு வீரர்கள், பாதுகாப்புடன் இடுப்பில் கயிறு கட்டிக்கொண்டு அந்த கழிவுநீர் தொட்டிக்குள் இறங்கி இருவரையும் தேடினர்.

அப்போது சந்திர துவாஜ பிஜோய் மற்றும் சுதர்சன் பிரதான் இருவரும் வி‌ஷவாயு தாக்கி பரிதாபமாக இறந்து விட்டது தெரிந்தது. 2 பேரின் உடல்களையும் மீட்டு தீயணைப்பு வீரர்கள் வெளியே கொண்டு வந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்ததும் போரூர் உதவி கமி‌ஷனர் கண்ணன், இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் ஆகியோர் தலைமையிலான மாங்காடு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று வி‌ஷவாயு தாக்கி பலியான 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவம் குறித்து அந்த நிறுவனத்தின் உரிமையாளர், மேற்பார்வையாளர் மற்றும் அங்கு பணி புரிந்த தொழிலாளர்கள் சிலரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ஊழியர்கள் வேலை செய்வதற்கு உரிய பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் பாதுகாப்பு வசதிகள் ஏதும் இல்லாமல் இந்த நிறுவனம் இயங்கி வந்தது தெரிந்தது. இதுபற்றி மாங்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story