கவனிக்க ஆள் இல்லாததால் விரக்தி: வயதான தம்பதி தூக்குப்போட்டு தற்கொலை
சென்னை கொருக்குப்பேட்டையில், கவனிக்க ஆள் இல்லாததால் விரக்தி அடைந்த வயதான தம்பதி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
ராயபுரம்,
சென்னை கொருக்குப்பேட்டை காமராஜர் நகர், நாவல் தெருவில் வசித்து வந்தவர் சண்முகம்(வயது 75). இவருடைய மனைவி கிருஷ்ணவேணி (65). இவர்களுக்கு ஆனந்தகுமார் என்ற மகனும், ஜானகி என்ற மகளும் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி விட்டது. இதில் மகன் வண்டலூரிலும், மகள் விழுப்புரத்திலும் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.
சொந்த வீட்டில் தனது மனைவியுடன் வசித்து வந்த சண்முகம், தனக்கு சொந்தமான மற்றொரு வீட்டை வாடகைக்கு விட்டு அதில் வரும் வருமானத்தை வைத்து வாழ்க்கை நடத்தி வந்தார்.
நேற்று காலை நீண்ட நேரம் ஆகியும் சண்முகம் வீட்டின் கதவு திறக்கப்படவில்லை. கதவை தட்டிப்பார்த்தும் திறக்காததால் ஆர்.கே.நகர் போலீசாருக்கு அக்கம் பக்கத்தினர் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, கணவன்–மனைவி இருவரும் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
சண்முகம் இதய நோயாலும், கிருஷ்ணவேணி சிறுநீரக கோளாறாலும் அவதிப்பட்டு வந்ததாக தெரிகிறது. மகனும், மகளும் வெளியூரில் வசிப்பதால் வயதான காலத்தில் கவனிக்க ஆள் இல்லாமலும், ஒருவரை ஒருவர் கவனித்துக்கொள்ள முடியாமலும் கணவன்–மனைவி இருவரும் அவதிப்பட்டு வந்தனர்.
பெற்ற பிள்ளைகள் இருந்தும் கவனிக்க ஆள் இல்லாமல் அனாதைகள் போல் இருக்கிறோமே என இருவரும் மனவேதனையில் இருந்து வந்தனர். இதனால் விரக்தி அடைந்த சண்முகம், கிருஷ்ணவேணி இருவரும் நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டது விசாரணையில் தெரிய வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.