சோழிங்கநல்லூரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் தற்கொலை முயற்சி உருக்கமான கடிதம் சிக்கியது


சோழிங்கநல்லூரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் தற்கொலை முயற்சி உருக்கமான கடிதம் சிக்கியது
x
தினத்தந்தி 21 Oct 2017 12:00 AM GMT (Updated: 2017-10-21T02:11:52+05:30)

சோழிங்கநல்லூரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர். அதில் பெண் ஒருவர் எழுதிய உருக்கமான கடிதம் சிக்கியது.

அடையார்,

ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் எங்கையா (வயது 65). ஓய்வுபெற்ற ராணுவ வீரர். இவர் சென்னையை அடுத்துள்ள சோழிங்கநல்லூரில் மகளிர் விடுதி நடத்தி வருகிறார். எங்கையாவின் மகள்கள் மேகா(35), சின்னவெங்கம்மா (32), பேத்திகள் நுதீக் (10), நிஜிதா(8), சிவபிரியா(1), பேரன் நாக சேத்தனா(8) என அனைவரும் அவர்களுக்கு சொந்தமான மகளிர் விடுதியிலேயே வசித்து வந்தனர்.

நேற்று காலை அவர்கள் அனைவரும் மொட்டைமாடிக்கு சென்றனர். சிறிது நேரத்தில் அங்கு ஓய்வுபெற்ற ராணுவ வீரர், அவரது மகள்கள், பேரன், பேத்தி என 7 பேரும் விஷம் சாப்பிட்டு மயங்கிய நிலையில் கிடந்தனர்.

இதுபற்றி விடுதியில் தங்கியிருந்த சிலர் செம்மஞ்சேரி போலீஸ்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அனைவரையும் மீட்டனர். எங்கையாவை சென்னை ராயபேட்டை அரசு ஆஸ்பத்திரியிலும், மேகா, சின்னவெங்கம்மா இருவரையும் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியிலும், ஒரு வயது குழந்தை உள்பட 4 பேரை பெருங்குடியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியிலும் அனுமதித்தனர். இதற்கிடையே, விடுதியில் இருந்து போலீசார் ஒரு கடிதத்தை கைப்பற்றினர்.

அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டு இருந்தது தொடர்பாக போலீசார் கூறியதாவது:-

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அந்த 7 பேரும் குலாப்ஜாமூன் மற்றும் கேக்கில் விஷம் கலந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளனர். மேகா உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தற்கொலை முயற்சியில் ஈடுபடுவதற்கு முன்பு மேகா உருக்கமான கடிதம் ஒன்றை எழுதி இருக்கிறார். அதில் நான், அப்பா, தங்கை, குழந்தைகள் அனைவரும் தற்கொலை செய்து கொள்ளப்போகிறோம், எல்லோரும் ஒருநாள் சாகத்தான் போகிறோம். நீ முன்னாலே போனா நான் பின்னாலே சாகணும். இப்படி தனித்தனியாக சாவதை விட நாங்கள் அனைவரும் ஒன்றாக சாகலாம் என முடிவெடுத்து உள்ளோம். அத்தை, மாமா நீங்கள் அனைவரும் நன்றாக இருங்கள். எங்கள் சாவுக்கு யாரும் காரணம் இல்லை என்று கூறப்பட்டு இருந்தது.
இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.


Next Story