அம்மா திட்ட முகாமில் எம்.எல்.ஏ.விடம் குறைகளை தெரிவித்த விவசாயி மயங்கி விழுந்து சாவு
ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட மேட்டுப்பாளையம் கிராமத்தில் அம்மா திட்ட முகாம் துணை தாசில்தார் சின்னப்பா தலைமையில் நடந்தது.
வாலாஜாபாத்,
இந்த முகாமில் ஸ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ. கே.பழனி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்டார்.
அப்போது மேட்டுப்பாளையம் கிராமத்தை சேர்ந்த விவசாயி சடகோபன் (வயது 70). மாத்தூர் பகுதியில் உள்ள அரசு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் விவசாய கடன்கள் வழங்குவதில்லை, உரங்கள் கிடைப்பதில்லை என்று எம்.எல்.ஏ. பழனியிடம் குறைகளை கூறிக்கொண்டிருந்தார். அப்போது சடகோபன் மயங்கி விழுந்தார். முகாமில் கலந்துகொண்ட பண்ருட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் செலின்வித்யா விவசாயி சடகோபனை பரிசோதனை செய்துவிட்டு உடனடியாக ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லுமாறு கூறினார்.
இதையடுத்து அருகில் இருந்தவர்கள் சடகோபனை மாத்தூர் பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பரிசோதனை செய்த டாக்டர்கள் சடகோபன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதனால் அம்மா திட்ட முகாம் பாதியிலேயே முடிக்கப்பட்டு எம்.எல்.ஏ. மற்றும் அதிகாரிகள், பொதுமக்கள் சோகத்துடன் திரும்பினர்.
இறந்து போன விவசாயிக்கு தயாரம்மாள் (60) என்ற மனைவியும், ரமேஷ்பாபு (32) என்ற மகனும், ரஞ்சிதா (30) என்ற மகளும் உள்ளனர்.