மண்ணச்சநல்லூரில் பெருவளை வாய்க்காலில் அமைக்கப்பட்ட தற்காலிக பாலம் உடைந்தது


மண்ணச்சநல்லூரில் பெருவளை வாய்க்காலில் அமைக்கப்பட்ட தற்காலிக பாலம் உடைந்தது
x
தினத்தந்தி 21 Oct 2017 4:15 AM IST (Updated: 21 Oct 2017 3:03 AM IST)
t-max-icont-min-icon

மண்ணச்சநல்லூரில் பெருவளை வாய்க்காலில் அமைக்கப்பட்ட தற்காலிக பாலம் உடைந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் பள்ளி மைதானத்தில் தண்ணீர் புகுந்ததால் மாணவர்கள் அவதியடைந்தனர்.

சமயபுரம்,

மண்ணச்சநல்லூர் காந்தி பூங்கா அருகில் ஓடும் புள்ளம்பாடி மற்றும் பெருவளை வாய்க்காலில் ஏற்கனவே கட்டப்பட்ட பாலம் பழுதடைந்த காரணத்தால் அதனை அகற்றி விட்டு புதியதாக பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன. வேலை நடந்து கொண்டிருந்த நேரத்தில் போக்குவரத்திற்கு இடைஞ்சல் இல்லாத வகையில் மாற்றுப்பாதையாக அவ்வழியே மணல் மூட்டைகளை அடுக்கி தற்காலிகமாக பாலம் அமைக்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த வாரம் மண்ணச்சநல்லூரில் இருந்து திருச்சி நோக்கி சென்ற சுற்றுலா பஸ்சும், டிராக்டரும் தற்காலிக பாலத்தின் வழியே சென்ற போது, பழுது ஏற்பட்டு நின்றன. இதனால் பாலம் பாதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பழுதடைந்த தற்காலிக பாலத்தை நெடுஞ்சாலை துறையினர் சரி செய்தனர். இதனால் அந்த வழியாக கனரக வாகனங்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பாசனத்திற்காக முக்கொம்பு வாத்தலையில் புள்ளம்பாடி வாய்க்காலில் 400 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. அந்த தண்ணீர் புள்ளம்பாடி வாய்க்கால் மற்றும் பெருவளை வாய்க்காலில் இருகரைகளையும் தொட்டு செல்லுகின்ற நிலையில் நேற்று முன்தினம் பெருவளை வாய்க் காலில் அமைக்கப்பட்ட தற்காலிக பாலம் உடைந்ததால் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதன் காரணமாக திருச்சியில் இருந்து மண்ணச்சநல்லூர் வழியாக செல்லும் கார், பஸ், வேன் போன்ற வாகனங்கள் மட்டுமல்லாது இருசக்கர வாகனங்களும் நெ.1. டோல்கேட், கூத்தூர், பழூர், சமயபுரம், வழியாக மண்ணச்சநல்லூர் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. இதேபோல் மண்ணச்சநல்லூரிலிருந்து திருச்சி செல்லும் அனைத்து வாகனங்களும் இதே வழியில்தான் சென்றன. இதன் காரணமாக மண்ணச்சநல்லூரிலிருந்து திருச்சிக்கு செல்ல 12 கி.மீ சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டதால் பயணிகள் மட்டுமல்லாது பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ மாணவிகள், கூலி வேலைக்குச் செல்லும் தொழிலாளர்கள், மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகள் என பலதரப்பட்ட மக்களும், கடும் பாதிப்பிற்கு உள்ளாகினர்.

மேலும் வாய்க்காலின் அருகே உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்திலும் தண்ணீர் புகுந்ததால் ஆசிரியர் மற்றும் மாணவர்கள் பெரும் அவதிக்கு உள்ளாகினர். இதனைத்தொடர்ந்து லால்குடி உதவிக்கோட்ட பொறியாளர், ஹரிகிருஷ்ணன் மேற்பார்வையில் மண்ணச்சநல்லூர் பகுதி நெடுஞ்சாலை துறை செயற்பொறியாளர், விவேகானந்தன் மற்றும் பணியாளர்கள் விரைந்து சென்று உடைப்பு ஏற்பட்ட தற்காலிக பாலத்தில் மணல் மூட்டைகளை அடுக்கி சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பள்ளி மைதானத்தில் புகுந்து கடல் போல் காட்சியளிக்கும் தண்ணீரை மாணவர்களின் நலன் கருதியும், சுகாதார சீர்கேடு ஏற்படாத வகையில் தடுக்கும் வகையிலும் உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மாவட்ட நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Related Tags :
Next Story