கழிவுநீர் தேங்கி நின்றதால் பதாகை வைத்து பொதுமக்கள் நூதன போராட்டம்


கழிவுநீர் தேங்கி நின்றதால் பதாகை வைத்து பொதுமக்கள் நூதன போராட்டம்
x
தினத்தந்தி 21 Oct 2017 4:30 AM IST (Updated: 21 Oct 2017 3:04 AM IST)
t-max-icont-min-icon

திருமுருகன்பூண்டியில் கழிவுநீர் அதிக அளவு தேங்கி நின்றதால் டெங்கு கொசு விதை பண்ணை திறப்பு விழா என்ற பதாகை வைத்து பொதுமக்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அனுப்பர்பாளையம்,

திருப்பூரை அடுத்த திருமுருகன்பூண்டி பேரூராட்சி 4-வது வார்டு மெயின் வீதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்ல வசதியாக பேரூராட்சி சார்பில் சாக்கடை கால்வாய் அமைக் கப்பட்டுள்ளது. ஆனால் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு நெடுஞ்சாலைதுறை சார்பில் சாலை விரிவாக்க பணிக்காக குழி தோண்டப்பட்டது.

இதனால் அப்பகுதியில் இருந்து வெளியேறும் கழிவுநீர் வெளியேற முடியாமல் அந்த குழியில் அதிக அளவில் தேங்கி வந்தது. கடந்த சில நாட்களாக திருப்பூர் சுற்று வட்டாரத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு உள்ள நிலையில் அந்த பகுதியில் தேங்கி வரும் கழிவுநீரால் கொசு உற்பத்தியாகி அந்த பகுதியிலும் டெங்கு காய்ச்சல் ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் பாதிப்படைந்த அப்பகுதி மக்கள் இதுதொடர்பாக பேரூராட்சி நிர்வாகத்திடம் மனு கொடுத்தனர்.

இதன்பேரில் பேரூராட்சி நிர்வாகம் மோட்டார் வைத்து கழிவுநீரை உறிஞ்சி எடுத்தது. ஆனால் இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்படாததால் அந்த பகுதியில் தொடர்ந்து கழிவுநீர் தேங்கி வருகிறது.

இந்த நிலையில் தேங்கி வரும் கழிவுநீர் பிரச்சினைக்கு தீர்வு காண வலியுறுத்தி அப்பகுதி மக்கள் நேற்று சம்பந்தப்பட்ட இடத்தில் திரண்டனர்.

பின்னர் அந்த குழிக்கு முன்பாக டெங்கு கொசு விதை பண்ணை திறப்பு விழா என்ற பதாகையை வைத்து அதற்கு மாலை அணிவித்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. எனவே உடனடியாக அங்கு தேங்கி வரும் கழிவுநீரை அகற்றி பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Related Tags :
Next Story