ஆட்சியாளர்களின் குறைகளை சுட்டிக்காட்டுவது கலைத்துறையினரின் வழக்கம் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேட்டி


ஆட்சியாளர்களின் குறைகளை சுட்டிக்காட்டுவது கலைத்துறையினரின் வழக்கம் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேட்டி
x
தினத்தந்தி 21 Oct 2017 4:30 AM IST (Updated: 21 Oct 2017 3:08 AM IST)
t-max-icont-min-icon

ஆட்சியாளர்களின் குறைகளை சுட்டிக்காட்டுவது கலைத்துறையினரின் வழக்கம் என்றும், நடிகர் விஜய்க்கு எதிர்ப்பு தெரிவித்த தமிழிசை சவுந்தரராஜனுக்கு கண்டனம் தெரிவித்தும் ஈரோட்டில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பரபரப்பு பேட்டி அளித்தார்.

ஈரோடு,

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஈரோட்டில் உள்ள அவரது வீட்டில் நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறிய தாவது:-

தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் பேச்சு சுதந்திரம், எழுத்து சுதந்திரம் பறிபோகும் அவலநிலை, பிரதமர் மோடி மற்றும் பா.ஜனதா கட்சியால் ஏற்பட்டு உள்ளது.

பொதுவாக கலைத்துறையினர், ஆங்கிலேய ஆட்சி நடந்த காலத்திலேயே ஆங்கிலேய அரசின் அடக்குமுறைகளை சுட்டிக்காட்டி நாடகங்கள் நடித்து இருக்கிறார்கள். வெள்ளையர் ஆட்சிக்கு பின்னரும், திரைப்படங்களில் என்.எஸ்.கிருஷ்ணன், எம்.ஆர்.ராதா, சிவாஜி, எம்.ஜி.ஆர்., அவர்களுக்கு பின்னர் கமல், ரஜினி, தற்போது விஜய், அஜீத் மற்றும் நகைச்சுவை நடிகர்கள் விவேக், வடிவேல் மற்றும் கலைத்துறையினர் ஆளுகின்ற கட்சி எதுவாக இருந்தாலும் அந்த ஆட்சியின் குறைகளை தமாசாக சுட்டிக்காட்டி மக்களிடம் கொண்டு சென்று இருக்கிறார்கள்.

காங்கிரஸ், தி.மு.க., அ.தி.மு.க. என்று எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் தவறுகளை சுட்டிக்காட்டுவது கலைத்துறையினரின் வழக்கம்.

தற்போது நடிகர் விஜய் நடித்து வெளியாகி உள்ள மெர்சல் திரைப்படத்தில் ஜி.எஸ்.டி.யால்(சரக்கு மற்றும் சேவை வரி) பொதுமக்கள் அடைந்து உள்ள இடர்பாடுகள், கஷ்டங்களை ஒரு வசனமாக பேசி உள்ளார். இதற்கு தமிழக பா.ஜனதா கட்சியின் தலைவராக உள்ள தமிழிசை சவுந்தரராஜன், அவரை தமிழிசை என்பதைவிட தமிழ் வசை என்று கூறலாம். அவர் படக்காட்சி வசனத்தை பெரிதாக எடுத்துக்கொண்டு நடிகர் விஜயை கடுமையான விமர்சனம் செய்து இருப்பதுடன், அவருடைய தனிப்பட்ட சம்பளம் குறித்து எல்லாம் பேசி கொச்சைப்படுத்தி இருக்கிறார்.

இதே பா.ஜனதா கட்சியில் இருக்கும் நடிகர்களான தர்மேந்திரா, சத்ருகன்சின்கா, நடிகை ஹேமமாலினி ஆகியோருக்கு வரும் சம்பளம் குறித்து இவருக்கு தெரியாதா?. இவர் நடிகர் விஜயை மட்டும் குறிப்பிட்டு தாக்குவது அவர்களின் சர்வாதிகார போக்கை காட்டுகிறது. தமிழிசை சவுந்திரராஜன் தேன்கூட்டில் கை வைக்க வேண்டாம், முள்வேலியில் சேலை போட வேண்டாம் என்று அவருக்கு கண்டனத்தை தெரிவித்துக்கொள் கிறேன்.

எழுத்து சுதந்திரம், பேச்சு சுதந்திரம் பறிக்கப்பட்டதால்தான் காந்தியடிகள் தலைமையில் காங்கிரஸ் கட்சி ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடி விடுதலை பெற்றுத்தந்தது.

எனவே தமிழிசை தொடர்ந்து தனிநபர் சுதந்திரத்தில் தலையிட்டால் தமிழக மக்கள் பொறுத்துக்கொண்டு இருக்கமாட்டார்கள். அதே நேரம் மெர்சல் திரைப்படத்துக்கு தமிழிசை சவுந்தரராஜன் மிகப்பெரிய விளம்பரத்தை பெற்றுத்தந்திருக்கிறார். ஜி.எஸ்.டி. குறித்து கூறி இருக்கும் கருத்தினை பார்க்க வேண்டும் என்பதற்காகவே ஏராளமானவர்கள் படம் பார்க்க செல்கிறார்கள்.

தமிழகத்தில் கடந்த 2 மாதங்களாக மிக மோசமாக டெங்கு காய்ச்சல் பொதுமக்களை வாட்டி வதைத்துக்கொண்டு இருக்கிறது. கொசு உற்பத்தி மற்றும் டெங்கு காய்ச்சல் பரவ காரணமாக இருக்கும் தனியார் மீது நடவடிக்கை எடுப்பது சரி. ஆனால், பொதுமக்கள் கூடும் ரெயில் நிலையம், பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் கொசு உற்பத்தியாக காரணமான மத்திய, மாநில அரசுகளுக்கு அபராதம் விதிப்பதுடன், சம்பந்தப்பட்டவர்களுக்கு ஜெயில் தண்டனையும் விதிக்க வேண்டும். நிலவேம்பு கசாயத்தை பொறுத்தவரை டெங்கு காய்ச்சல் பாதித்தவர்களுக்கு சிறந்த மருந்து. அதை குடிப்பதில் உள்ள அளவில்தான் வேறுபாடு இருக்கும். நடிகர் கமல் கூட, நிலவேம்பு கசாயம் குறித்து தவறாக கூறவில்லை என்று தெரிவித்து இருக்கிறார்.

ஜி.எஸ்.டி. வரி விதிப்பு குறித்து திட்டமிட்டது காங்கிரஸ் கட்சிதான். ஆனால் பொதுமக்கள் எந்த வகையிலும் பாதிப்படையக்கூடாது என்பதில் காங்கிரஸ் உறுதியாக இருந்தது. ஆனால் மோடி தலைமையிலான பா.ஜனதா அரசு மக்களை சுரண்டி, ரத்தத்தை குடிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு உள்ளது. ரூபாய் நோட்டுகள் மதிப்பிழப்பு நடவடிக்கையிலும் அவசர கோலத்தில் நடந்து கொண்டது. சர்வாதிகாரத்தனத்துடன் மோடி நடந்து கொள்கிறார். இந்திய பொருளாதாரத்தை குட்டிச்சுவராக்கும்வரை அவர்கள் விட்டுச்செல்ல மாட்டார்கள்.

தமிழக காங்கிரஸ் கட்சியில் நடிகை குஷ்பு உறுப்பினராக இருக்கிறார். அவருடைய உறுப்பினர் அட்டை 2019-ம் ஆண்டுவரை செல்லுபடியாகும்.காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி விரைவில் நியமிக்கப்படுவார். இதற்கு அனைத்து மாநில தலைவர்களும் ஒப்புதல் அளித்து உள்ளனர்.

ஆர்.கே.நகர் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தி.மு.க.வுக்கு ஆதரவு அளிக்கும். இந்த தேர்தலில் டி.டி.வி.தினகரன் போட்டியிட தடை விதிக்க வேண்டும். அவர் தேர்தல் ஆணையத்துக்கே லஞ்சம் கொடுக்க முயன்றவர் என்பதால் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை விதிக்க வேண்டும். முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை கமிஷன் தேவை இல்லை. சசிகலாவை விசாரிக்க வேண்டிய முறையில் விசாரித்தால் அனைத்து உண்மையும் தெரியும். தமிழக அரசு மக்களின் எந்த கோரிக்கைகளையும் நிறைவேற்றுவதில்லை. எருமையின் மீது மழை பெய்ததுபோன்று மவுனமாகவே இருக்கிறார்கள்.

இவ்வாறு தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார். 

Next Story