தங்கை கணவனை கொலை செய்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை கோர்ட்டு தீர்ப்பு


தங்கை கணவனை கொலை செய்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 21 Oct 2017 3:45 AM IST (Updated: 21 Oct 2017 3:08 AM IST)
t-max-icont-min-icon

திருப்பத்தூர் அருகே தங்கை கணவனை கொலை செய்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து திருப்பத்தூர் கோர்ட்டில் தீர்ப்பு வழங்கப்பட்டது.

திருப்பத்தூர்,

திருப்பத்தூர் அருகே உள்ள குனிச்சி கிராமத்தை சேர்ந்தவர் சம்பத் (வயது 55). இவரது சகோதரர்கள் ரஜினி, நடராஜன். இவர்கள் 3 பேரும் பெங்களூருவில் கூலி வேலை செய்து வந்தனர். சம்பத்தின் தங்கை லட்சுமி. அவரது கணவர் மற்றொரு நடராஜன். இவர்களது மகள் சரளா.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சம்பத்தின் தம்பி ரஜினிக்கும், சரளாவுக்கும் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகு அண்ணன், தம்பிகள் அனைவரும் பெங்களூருவில் ஒன்றாக வசித்து வந்தனர்.

அப்போது சம்பத்தின் சகோதரர் நடராஜன் சரளாவிடம் தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தனது கணவர் ரஜினியிடம் சரளா புகார் தெரிவித்தார். ஆனால் ரஜினி அதனை கண்டுகொள்ளவில்லை.

கொலை

இதனால் சரளா கணவனுடன் கோபித்து கொண்டு குனிச்சியில் உள்ள தனது தாயார் வீட்டுக்கு வந்தார். கடந்த 2014-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 20-ந் தேதி சரளா, அவரது தந்தை நடராஜன் ஆகிய 2 பேரும் நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த சம்பத், கணவனுடன் வாழ்வதற்கு சரளாவை அனுப்பி வையுங்கள் என நடராஜனிடம் கூறினார்.

அதற்கு நடராஜன் மறுப்பு தெரிவித்தார். மேலும் அங்கு வேலை செய்து கொண்டிருந்த சரளாவை வீட்டுக்கு அனுப்பிவிட்டு, தனது வேலையை தொடர்ந்து செய்து கொண்டிருந்தார்.

இதனால் ஆத்திரமடைந்த சம்பத் கத்தியால் நடராஜனின் மார்பில் குத்தினார். ரத்த வெள்ளத்தில் துடித்து கொண்டிருந்த நடராஜனை சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார்.

ஆயுள் தண்டனை

இதுகுறித்து கந்திலி போலீசார் வழக்குப்பதிவு செய்து, சம்பத்தை கைது செய்தனர். இந்த வழக்கு திருப்பத்தூரில் உள்ள 3-வது மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அரசு தரப்பில் வக்கீல் ஆர்.ரமேஷ் ஆஜரானார்.

நேற்று இந்த வழக்கை நீதிபதி டி.இந்திராணி விசாரித்து, சம்பத்துக்கு ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார். 

Related Tags :
Next Story