டெங்கு தடுப்பு ஆய்வின் போது தூய்மை இல்லா மின்வாரிய அலுவலகம், மருத்துவமனைக்கு அபராதம்


டெங்கு தடுப்பு ஆய்வின் போது தூய்மை இல்லா மின்வாரிய அலுவலகம், மருத்துவமனைக்கு அபராதம்
x
தினத்தந்தி 21 Oct 2017 4:44 AM IST (Updated: 21 Oct 2017 4:44 AM IST)
t-max-icont-min-icon

டெங்குதடுப்பு ஆய்வின்போது தூய்மை இல்லாமல் காணப்பட்ட மின்வாரிய அலுவலகம், மருத்துவமனை, அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு அபராதம் விதித்து கலெக்டர் வீரராகவராவ் உத்தரவிட்டார்.

மதுரை,

கலெக்டர் வீரராகவராவ் டெங்கு தடுப்பு நடவடிக்கை குறித்து திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் ஆய்வு நடத்தினார். ஆழ்வார்நகர் பிரிவு தமிழ்நாடு மின் வாரிய உதவி மின்என்ஜினீயர் அலுவலகத்தை பார்த்தார். அப்போது அந்த அலுவலக வளாகம் தூய்மை இன்றி, பராமரிப்பில்லாமல் இருந்தது. அதனால் ரூ.2ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

அதேபோல் சதாசிவநகரில் உள்ள தனியார் மருத்துவமனை மற்றும் அடுக்குமாடி குடியிருப்பில் தண்ணீர் தேங்கி சுத்தமில்லாமல் காணப்பட்டது. அதன்காரணமாக மருத்துவமனைக்கு ரூ.1000, அடுக்கு மாடிகுடியிருப்புக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தார். அதைதொடர்ந்து கரடிப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட எல்.ஜி. நகர் பகுதி, நாகமலைபுதுக்கோட்டை எஸ்.பி.ஓ.ஏ. பள்ளிக்கூடத்தில் ஆய்வு செய்தார். பள்ளிக்கூட வளாகத்தை தூய்மையாக வைத்து கொள்ளவும், ஆங்காங்கே குப்பை தொட்டிகள் வைக்கும்படியும் அறிவுறுத்தினார்.

என்.ஜி.ஓ. காலனி, சதாசிவ நகர் பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகளிடம் டெங்கு காய்ச்சல் தொடர்பாக மாவட்ட நிர்வாகம் எடுத்துவரும் நடவடிக்கைகளை விரிவாக எடுத்துரைத்தார். அங்குள்ள வீடுகளில் தண்ணீர் சேமிப்பு தொட்டி, பாத்திரத்தை தூய்மையாக வைத்துக்கொள்ளும்படி வலியுறுத்தினார். வீடுகளில் தேக்கி வைக்கப்பட்டுள்ள தண்ணீர் தொட்டிகளில் ஏடிஎஸ் கொசு புழுக்கள் உருவாவதை தடுப்பதற்கான அறிவுரைகளை வழங்கினார். ஏற்குடி அச்சம்பத்து ஊராட்சியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையத்தில் தண்ணீர் பிடித்துக்கொண்டிருந்த பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
ஆய்வின்போது துணை இயக்குனர்(சுகாதாரப்பணிகள்) அர்ஜுன்குமார், தாசில்தார் பாலாஜி, வட்டார வளர்ச்சி அலுவலர் சோனாபாய் உள்பட அரசு அலுவலர்கள் உடன் சென்றனர்.

Next Story