கரும்பு விவசாயிகளின் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் குறைகேட்பு கூட்டத்தில் கோரிக்கை


கரும்பு விவசாயிகளின் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் குறைகேட்பு கூட்டத்தில் கோரிக்கை
x
தினத்தந்தி 20 Oct 2017 11:40 PM GMT (Updated: 2017-10-21T05:09:55+05:30)

மாவட்டத்தில் 4 சர்க்கரை ஆலைகள் விவசாயிகளுக்கு ரூ.300 கோடி பாக்கியை தர மறுக்கிறது. கரும்பு விவசாயிகளின் பிரச்சினைக்கு தீர்வுகாண மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடலூரில் நடைபெற்ற குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

கடலூர்,

விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக குறைகேட்பு கூட்ட அரங்கில் கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட வருவாய் அதிகாரி விஜயா, கலெக்டரின் நேர்முக உதவியாளர்(வேளாண்மை) கிருபாகரன், வேளாண்மைத்துறை இணை இயக்குனர் நாட்ராயன் உள்ளிட்ட அனைத்துத்துறை அதிகாரிகள், விவசாயிகள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் விவசாயிகள் தங்கள் பகுதியில் உள்ள வேளாண்மை சம்பந்தமான குறைகளை தெரிவித்தனர். அதன் விவரம் வருமாறு:-

ரெங்கநாயகி(குமராட்சி):- வீராணம் ஏரியில் படர்ந்துள்ள ஆகாயத்தாமரைகளை அகற்ற வேண்டும். ஆயிரத்து 400 ஏக்கர் நிலங்கள் பாசன வசதிபெறும் ராதா வாய்க்காலில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி கடைமடை வரை தண்ணீர் கிடைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

செல்வராஜ்(காட்டுமன்னார்கோவில்):- எந்திர முறையில் நடவு மேற்கொள்ளும் அனைத்து விவசாயிகளுக்கும் முழு மானியம் வழங்க வேண்டும். தேவைப்படும் வேளாண் உபகரணங்களையும் தர வேண்டும்.

கலியபெருமாள்(விருத்தாசலம்):- என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தால் 30 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துவிட்டது. இதனால் மணிமுக்தா நதியை சுற்றியுள்ள 40 கிராமங்களில் தண்ணீர் இல்லாமல் விவசாயம் செய்ய முடியாத நிலை உள்ளது.

ஜெகதீசன்(நல்லூர்):- கொசப்பள்ளம் ஊராட்சியில் குடிநீர், சாலை, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும்.

மணிகண்டன்(மங்களூர்):- மானாவாரி விவசாயிகளுக்கு பயிர்காப்பீட்டு தொகையை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏ.டி.டி.45 ரக நெல்விதைகள் இல்லாததால் மங்களூர் பகுதியில் நெல் சாகுபடி கேள்விக்குறியாக உள்ளது.

மாதவன்(கடலூர்):- மாவட்டத்தில் சர்க்கரை ஆலைகள் விவசாயிகளுக்கு தர வேண்டிய ரூ.300 கோடி பாக்கியை தர மறுக்கின்றன. கரும்பு விவசாயிகளின் பிரச்சினைக்கு தீர்வுகாண மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதே கோரிக்கையை வலியுறுத்தி மேலும் பல விவசாயிகள் பேசினர்.
கலெக்டர்:- பாக்கி வைத்துள்ள 2 சர்க்கரை ஆலைகளுக்கு நோட்டீசு அனுப்பி இருக்கிறேன். இந்த மாதத்துக்குள் பாக்கித்தொகையை தருவதாக உறுதி அளித்துள்ளன. அப்படி தராத பட்சத்தில் சம்பந்தப்பட்ட சர்க்கரை ஆலைகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

ரவீந்திரன்(பரங்கிப்பேட்டை):- சிதம்பரம் பகுதியில் வெள்ளபாதிப்பை தடுக்க வாய்க்கால்கள், வடிகால் வாய்க்கால்கள் ஆகியவற்றில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். கொள்ளிடத்தின் கரையோர கிராமங்களில் கடல்நீர் உள்புகுவதை தடுக்க கொள்ளிடம் ஆற்றின்குறுக்கே தடுப்பணை அமைக்க வேண்டும்.

வேல்முருகன்(புவனகிரி):- உளுந்து பயிர்காப்பீட்டு தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குஞ்சிதபாதம்(கீழ்அனுவம்பட்டு):- வண்ணான்குடிகாடு முதல் நாச்சியார்பேட்டை இடையே உள்ள பெலாந்துறை அணைக்கட்டு வாய்க்காலை தூர்வார வேண்டும்.

பாலு(குமராட்சி):- வீராணம் ஏரியின் கிளை வாய்க்கால்களை தூர்வார வேண்டும்.

சக்திவேல்(விருத்தாசலம்):- பதிவு செய்யாத கரும்புக்கு சர்க்கரை ஆலைகள் ஒரு வாரத்தில் பணத்தை தருகின்றன. ஆனால் பதிவு செய்த கரும்புகளுக்கு பணத்தை தருவதில்லை. தற்போது பயிர் சாகுபடி காலம் என்பதால் பணம் இல்லாமல் கஷ்டப்படுகிறோம்.

முருகானந்தம்(கீரப்பாளையம்):- மாவட்ட பதிவு மூப்பு அடிப்படையில் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கி விவசாயத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இயற்கை முறையில் விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் மூலம் உரம் வழங்க வேண்டும்.

முத்துசாமி (நல்லூர்) கடந்த அக்டோபர் 2-ந் தேதி காந்தி ஜெயந்தி அன்று திருப்பெயர் ஊராட்சியில் கிராமசபை கூட்டம் நடக்கவில்லை என்று தெரிவித்தார். அதேபோல வேறு சில ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டம் நடைபெறவில்லை.
இவ்வாறு விவாதம் நடந்தது.

Next Story