கூடங்குளம் அணுமின் நிலைய பகுதியில் பேரிடர் மேலாண்மை ஒத்திகை கலெக்டர் தலைமையில் ஆலோசனை


கூடங்குளம் அணுமின் நிலைய பகுதியில் பேரிடர் மேலாண்மை ஒத்திகை கலெக்டர் தலைமையில் ஆலோசனை
x
தினத்தந்தி 21 Oct 2017 8:30 PM GMT (Updated: 21 Oct 2017 3:37 PM GMT)

கூடங்குளம் அணுமின் நிலைய பகுதியில் பேரிடர் மேலாண்மை ஒத்திகை நடத்துவது தொடர்பான முன்னேற்பாடு ஆலோசனை கூட்டம் நெல்லையில் கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமையில் நேற்று நடந்தது. ஆலோசனை கூட்டம் நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், கூடங்குளம் அணுமின்நிலைய பகுதிய

நெல்லை,

கூடங்குளம் அணுமின் நிலைய பகுதியில் பேரிடர் மேலாண்மை ஒத்திகை நடத்துவது தொடர்பான முன்னேற்பாடு ஆலோசனை கூட்டம் நெல்லையில் கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமையில் நேற்று நடந்தது.

ஆலோசனை கூட்டம்

நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், கூடங்குளம் அணுமின்நிலைய பகுதியில் பேரிடர் மேலாண்மை ஒத்திகை நடத்துவது தொடர்பான முன்னேற்பாடு ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

கூடங்குளத்தில் அதிநவீன முறையில் அமைக்கப்பட்டுள்ள அணுமின்நிலையத்தில் இயற்கை சீற்றம் மற்றும் மனித தவறுகளால் ஏற்படும் பேரிடர் காலங்களில் கூடங்குளத்தை சுற்றியுள்ள பகுதிகளில் அணுமின் நிலையத்துடன் இணைந்து மாவட்ட நிர்வாகத்தின் மூலம் செய்ய வேண்டிய பேரிடர் மேலாண்மை குறித்த ஒத்திகை ஏற்கனவே இரண்டு முறை நடத்தப்பட்டுள்ளது. அணுமின் நிலையத்தில் இருந்து 1.6 கி.மீ. தூரம், 5 கி.மீ. தூரம், 16 கி.மீ. தூரம் சுற்றுப்பகுதிகள் வரை பேரிடர் காலங்களில் செய்ய வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பொதுமக்கள் மற்றும் அலுவலர்கள் பயிற்சி பெறும் வகையில் ஒத்திகை நடத்தப்பட உள்ளது.

பரமேஸ்வரபுரம் பகுதியில்...

இந்த ஒத்திகை இந்த முறை பரமேஸ்வரபுரம் பகுதியில் அடுத்த மாதம் (நவம்பர்) 26–ந்தேதி அன்று நடத்தப்பட உள்ளது. ஒத்திகையின்போது, காவல் துறையின் அறிவிப்பு, அவசரகால குழுக்களின் மூலம் அயோடின் மாத்திரை வழங்குதல், மக்களை அப்புறப்படுத்துதல் போன்ற நிகழ்வுகளை அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து சிறப்பாக மேற்கொள்ள வேண்டும். முன்னதாகவே, இப்பகுதி மக்களுக்கு பேரிடர் மேலாண்மை ஒத்திகை குறித்து தெரிவிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு உதயகுமார், கூடங்குளம் அணுமின் நிலைய அறிவியில் அலுவலர் பண்டாரம், மனிதவள மேலாளர் அருண்மாறன், தரஉறுதிப்பாடு கண்காணிப்பாளர் ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story