பல்லாரி அருகே கார் மீது லாரி மோதல் பெண்கள் உள்பட 4 பேர் நசுங்கி சாவு


பல்லாரி அருகே கார் மீது லாரி மோதல் பெண்கள் உள்பட 4 பேர் நசுங்கி சாவு
x
தினத்தந்தி 21 Oct 2017 10:45 PM GMT (Updated: 21 Oct 2017 9:32 PM GMT)

பல்லாரி அருகே நேற்று கார் மீது லாரி மோதியதில் காரில் இருந்த பெண்கள் உள்பட 4 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர்.

பெங்களூரு,

உறவினரின் துக்க நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்ற போது இந்த சோக சம்பவம் நடந்துள்ளது.

பல்லாரி மாவட்டம் ஒசப்பேட்டே தாலுகா காதிகனூர் அருகே பாபினாநாயக்கனஹள்ளி கிராமத்தின் அருகே நேற்று காலையில் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது, அந்த சாலையில் தறிகெட்டு ஓடிய லாரி கார் மீது பயங்கரமாக மோதிவிட்டு சாலையோரம் உள்ள மரத்தில் மோதி நின்றது.

இந்த விபத்தில் கார் அப்பளம்போல் நொறுங்கியது. மேலும் மரத்தில் மோதிய லாரியின் முன்புறம் நொறுங்கியது. இதற்கிடையே, லாரியை அங்கேயேவிட்டு அதன் டிரைவர் ஓடிவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் காதிகனூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று காரில் சிக்கி இருந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, காரில் பயணித்த 4 பேர் உடல் நசுங்கி இறந்தது தெரியவந்தது. மேலும், 2 குழந்தைகள் உள்பட 8 பேர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடுவது தெரியவந்தது. படுகாயம் அடைந்தவர்களை மீட்ட போலீசார் அருகே உள்ள அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு, அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். மேலும், இறந்தவர்களின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், போலீசார் நடத்திய விசாரணையில், இறந்தவர்களின் பெயர்கள் வெங்கேடஷ் (வயது 44), நளினி (34), வெங்கடம்மா (55), பர்வதம்மா (53) என்பதும், இவர்கள் அனைவரும் உறவினர்கள் என்பதும் தெரியவந்தது. சித்ரதுர்கா மாவட்டம் இரியூரை சேர்ந்த அவர்கள் 4 பேரும் ஒசப்பேட்டேயில் இறந்துபோன உறவினர் ஒருவரின் துக்க நிகழ்ச்சியில் கலந்துகொள்ள காரில் சென்றபோது விபத்தில் சிக்கி உயிரிழந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து காதிகனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்தபகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதேப் போல் சித்ரதுர்கா மாவட்டம் கியடிகெரே கிராமத்தில் நேற்று மதியம் சென்று கொண்டிருந்த ஆட்டோவும், காரும் மோதிக் கொண்டன. இதில், காரும், ஆட்டோவும் நொறுங்கின. இந்த விபத்தில் பாலவனஹள்ளி கிராமத்தை சேர்ந்த திப்பேசாமி (55), நபிசாப் (50) ஆகியோர் படுகாயம் அடைந்து பரிதாபமாக இறந்தனர். மேலும், 8 பேர் பலத்த காயம் அடைந்தனர்.


Next Story