கட்டிடம் இடிந்து 8 பேர் பலி: போக்குவரத்து கழக பணிமனையில் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


கட்டிடம் இடிந்து 8 பேர் பலி: போக்குவரத்து கழக பணிமனையில் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 22 Oct 2017 4:30 AM IST (Updated: 22 Oct 2017 3:18 AM IST)
t-max-icont-min-icon

கட்டிடம் இடிந்து 8 பேர் பலியான சம்பவம் தொடர்பாக திருச்சி போக்குவரத்து கழக பணிமனையில் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால் 2 மணிநேரம் பஸ்கள் இயங்காததால் பயணிகள் அவதி அடைந்தனர்.

திருச்சி,

நாகை மாவட்டம் பொறையாறு அரசு போக்குவரத்து கழக பணிமனை கட்டிடம் இடிந்து விழுந்து டிரைவர், கண்டக்டர் உள்பட 8 பேர் பலியானார்கள். இந்த விபத்தில் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். விபத்தில் பலியானவர்களின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரண தொகை வழங்க வேண்டும் என்று கூறி தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் போக்குவரத்து கழக ஊழியர்கள் இரங்கல் கூட்டம் மற்றும் ஆர்ப்பாட்டத்தை நடத்தி வருகிறார்கள்.

திருச்சி கண்டோன்மெண்ட் போக்குவரத்து கழக பணிமனை முன் ஊழியர்கள் ஒன்று கூடி கருப்பு பட்டை அணிந்து கட்டிட விபத்தில் இறந்த ஊழியர்களுக்காக சிறிதுநேரம் அஞ்சலி செலுத்தினர். அதன்பிறகு இறந்த ஊழியர்களின் குடும்பத்துக்கு உரிய நிவாரண தொகை வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டமும் நடத்தினார்கள்.

இதனால் திருச்சியில் இருந்து கோவை, சேலம், ராமேசுவரம், மதுரை, சிவகங்கை, திருப்பூர், வேளாங்கண்ணி உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு செல்ல வேண்டிய விரைவு பஸ்களும், கீரனூர், சூரியூர், ஆவூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டிய பஸ்களும் இயக்கப்படவில்லை. இதன் காரணமாக தீபாவளி பண்டிகை முடிந்து சொந்த ஊருக்கு திரும்பியவர்கள் அவதி அடைந்தனர். சுமார் 2 மணிநேரம் கழித்து வழக்கம்போல் பஸ்கள் இயக்கப்பட்டன.


Next Story