காற்றாலைகளால் மழை பொழிவு தடுக்கப்படுகிறதா? ஆய்வு நடத்த விவசாயிகள் கோரிக்கை


காற்றாலைகளால் மழை பொழிவு தடுக்கப்படுகிறதா? ஆய்வு நடத்த விவசாயிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 22 Oct 2017 4:15 AM IST (Updated: 22 Oct 2017 3:20 AM IST)
t-max-icont-min-icon

உடுமலை பகுதியில் நிறுவப்பட்டுள்ள காற்றாலைகளால் மழை பொழிவு தடுக்கப்படுகிறதா? என ஆய்வு நடத்த வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தளி,

தமிழக-கேரள மாநிலங்களுக்கு பருவ காலங்களில் மழை பொழிவை பெற்று தருகின்ற அட்சயபாத்திரமாக மேற்கு தொடர்ச்சி மலைகள் விளங்கி வருகின்றன. மேற்கு தொடர்ச்சி மலைகளில் இருந்து ஏப்ரல் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையும் தென் மேற்கு பருவக்காற்று பாலக்காடு, கம்பம்பள்ளத்தாக்கு, ஆரல்வாய்மொழி, செங்கோட்டை வழியாக வருகின்றன. அதன் மூலமாக தமிழகத்தில் தென் மேற்கு பருவமழையை நாம் பெற்று வருகிறோம்.

மேலும் தென்மேற்கு பருவக்காற்றை அடிப்படையாக கொண்டு காற்றாலைகள் மூலமாக மின்சாரம் தயாரிக்கும் திட்டம் தமிழகத்தில் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தில் தனியார் நிறுவனங்கள் ஆர்வத்துடன் களமிறங்கியதுடன், பலகோடி ரூபாயை அதில் முதலீடும் செய்தன. இந்த நிறுவனங்கள் காற்றின் வேகத்திற்கு தகுந்தாற்போல் விண்ட் மாஸ்ட் கருவியின் உதவியுடன் காற்றலைகளை நிறுவுவதற்கான இடங்களை தேர்வு செய்தன.

தனியார் நிறுவனங்கள்

அந்த வகையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக பாலக்காடை மையமாக கொண்டு கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் சுமார் 5 ஆயிரம் காற்றாலைகளை தனியார் நிறுவனங்கள் நிறுவின. அப்போது 250 கிலோ வாட் திறன் கொண்ட காற்றாலைகள் முதல் 2,100 திறன் கொண்ட காற்றாலைகள் நிறுவப்பட்டன. அதன் மூலமாக ஆண்டிற்கு 250 கிலோ வாட் திறன்கொண்ட காற்றாலையில் இருந்து 4 லட்சம் யூனிட் மின்சாரமும், 2 ஆயிரத்து 100 கிலோவாட் திறன்கொண்ட காற்றாலையில் இருந்து 50 லட்சம் யூனிட் மின்சாரமும் உற்பத்தி செய்யப்பட்டது.

காற்றாலைகள் மூலமாக உற்பத்தி செய்யப்பட்ட மின்சாரத்தை கொண்டு கோடை காலங்களில் நிலவி வந்த மின்பற்றாக்குறைக்கு தீர்வு ஏற்படுத்த தமிழக அரசு முன்வந்தது. இதையடுத்து தனியார் நிறுவனங்கள் மூலமாக காற்றாலைகளில் உற்பத்தி செய்யப்பட்ட மின்சாரத்தை தமிழக அரசு கொள்முதல் செய்து மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு வினியோகம் செய்தது. இதனால் தமிழகத்தில் விவசாயம் மற்றும் தொழில்சார்ந்த நிறுவனங்களுக்கு மின்சாரம் தடையின்றி கிடைத்து வந்தது. இதன் காரணமாக கூலித்தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்புகளும் உருவாகின.

கோரிக்கை

இந்த நிலையில் உடுமலை-பல்லடத்திற்கு இடைப்பட்ட பகுதியில் காற்றாலைகள் நிறுவப்பட்டதால் சமீப காலமாக பருவ மழையின் தாக்கம் குறைந்து விட்டதாக தெரிகிறது. மேலும் உடுமலை பகுதியில் நிறுவப்பட்டுள்ள காற்றாலைகள் நிலத்தடி நீர்மட்டத்தை உறிஞ்சி வருவதாகவும் மழைப்பொழிவிற்கு தயாராகி வருகின்ற மேகக்கூட்டங்களை திசைமாற்றி விடுவதாகவும் வதந்தி பரவி வருகின்றது.

அதற்கு சான்றாக காற்றாலைகள் அதிகமாக உள்ள பகுதிகளை தவிர்த்து மற்ற பகுதிகளில் கணிசமாக மழைப்பொழிவு ஏற்பட்டுள்ளதை விவசாயிகள் சுட்டிக்காட்டுகின்றனர். ஆதலால் உடுமலை பகுதியில் செப்டம்பர் முதல் நவம்பர் மாதம் வரையிலான பருவமழை காலங்களில் காற்றாலைகளால் மழைப்பொழிவு தடுக்கப்படுகிறதா? என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. 

Related Tags :
Next Story