‘மெர்சல்’ பட விவகாரத்தை அரசியலாக்கி பா.ஜனதாவுக்கு எதிரான பிரசாரத்தை மேற்கொள்வது ஏன்? பொன்.ராதாகிருஷ்ணன் கேள்வி


‘மெர்சல்’ பட விவகாரத்தை அரசியலாக்கி பா.ஜனதாவுக்கு எதிரான பிரசாரத்தை மேற்கொள்வது ஏன்? பொன்.ராதாகிருஷ்ணன் கேள்வி
x
தினத்தந்தி 22 Oct 2017 4:45 AM IST (Updated: 22 Oct 2017 3:22 AM IST)
t-max-icont-min-icon

‘மெர்சல்‘ பட விவகாரத்தை அரசியலாக்கி பா.ஜனதாவுக்கு எதிரான பிரசாரத்தை மேற்கொள்வது ஏன்?, என ப.சிதம்பரத்துக்கு, மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.

களியக்காவிளை,

மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நிதி ஒதுக்கீடு செய்ததின் பேரில், குமரி மாவட்டத்தில் பாகோடு பஞ்சாயத்து திக்குறிச்சி மகாதேவர் ஆலயம் அருகில் தாமிரபரணி ஆற்றையொட்டி ரூ.10 லட்சம் செலவில் தடுப்பு சுவர் கட்டப்பட்டு வருகிறது. அந்த கட்டுமான பணிகளை பொன்.ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

போக்குவரத்து கழக பணிமனை இடிந்து 8 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தனி அதிகாரியை நியமித்து விசாரணை நடத்த வேண்டும். மோடி பிரதமராக இருக்கும் வரை அ.தி.மு.க.வை அசைக்க முடியாது என தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியிருப்பது பற்றி கேட்கிறீர்கள்.

தெர்மோகோல், சோப்புநுரை போன்றவை தொடர்பாக தமிழக அமைச்சர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர். அதே போன்ற இந்த கருத்துக்கு, நான் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

மெர்சல் பட விவகாரத்தில், முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் திறமையாக பேசுவதாக நினைத்து பேசிக்கொண்டு இருக்கிறார். மெர்சல் திரைப்படம் எந்த நோக்கத்திற்காக எடுக்கப்பட்டது என்பது முக்கியம்.

படத்தில் உண்மைக்கு புறம்பான கருத்துக்கள் இடம் பெற்றுள்ளன. 50 லட்சம் மக்கள் தொகை கொண்ட சிங்கப்பூர் நாட்டுடன் 130 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவை ஒப்பிட்டு பேசுவது ஏற்றுக்கொள்ள முடியாதது. எனவே மெர்சல் படத்தை அரசியலாக்கி பா.ஜனதாவுக்கு எதிரான பிரசாரத்தை ப.சிதம்பரம் மேற்கொள்வது ஏன்?

பா.ஜனதா மாநில தலைவராக நான் இருந்த போது விஸ்வரூபம் படத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்தேன். நடிகர் ரஜினி பா.ஜனதாவுக்கு வரவேண்டும். கமல் நடிகராக மட்டும் இருந்தால் நான் பதில் சொல்ல தேவையில்லை. தற்போது அவரது பேச்சுக்கு பதில் கூறவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அவர் மக்களை குழப்பம் அடையச் செய்யும் விதத்தில் கருத்தை தெரிவித்துவிட்டு, பின்னர் மன்னிப்பு கோருகிறார். தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ‘இசட்‘ பிரிவு பாதுகாப்பு கேட்கும் போது, தமிழகத்தில் சாதாரண மக்களின் பாதுகாப்பு எப்படி இருக்கும்? என யோசிக்க வேண்டும்.

இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார். 

Next Story