டெங்கு, மர்ம காய்ச்சலுக்கு பள்ளி மாணவ- மாணவிகள் உள்பட 7 பேர் பலி


டெங்கு, மர்ம காய்ச்சலுக்கு பள்ளி மாணவ- மாணவிகள் உள்பட 7 பேர் பலி
x
தினத்தந்தி 21 Oct 2017 11:00 PM GMT (Updated: 2017-10-22T03:22:59+05:30)

தமிழகத்தில் டெங்கு, மர்ம காய்ச்சலுக்கு பள்ளி மாணவ- மாணவிகள் உள்பட 7 பேர் பலியானார்கள்.

திருப்பூர்,

திருப்பூர் மாவட்டம் காங்கேயம்- திருப்பூர் ரோடு காந்தி நகரை சேர்ந்தவர் திருமூர்த்திசாமி. அவருடைய மகன் ரஞ்சித்குமார் (வயது 16). 10-ம் வகுப்பு மாணவன். இவர் மர்ம காய்ச்சல் காரணமாக காங்கேயம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீட்டுக்கு திரும்பினார். மறுநாளும் காய்ச்சல் ஏற்பட்டதால் அவர், காங்கேயத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் அவர், மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் நேற்று முன்தினம் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் ரஞ்சித்குமார் நேற்று பரிதாபமாக இறந்தார். மாணவனுக்கு என்ன காய்ச்சல் இருந்தது என்பது குறித்து எந்த மருத்துவமனையிலும் சரியாக கூறவில்லை என்று அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.

வேலூர் மாவட்டம் ஆம்பூர் ரத்தினம்நகரை சேர்ந்தவர் சலீம். இவருடைய மகன் முகமத் யஹியா (வயது 7). 1-ம் வகுப்பு மாணவன். காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அவன், சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டான். அங்கு பரிசோதித்து பார்த்த போது மாணவனுக்கு டெங்கு அறிகுறி இருப்பது தெரியவந்தது. உடல்நிலை மோசமடைந்த நிலையில் முகமத்யஹியாவை அவனது பெற்றோர் வீட்டுக்கு அழைத்து சென்றபோது வழியிலேயே அவன் இறந்து விட்டான்.

பேரணாம்பட்டு டவுன் ரஷிதாபாத் பகுதியை சேர்ந்தவர் நசீர். இவருடைய மனைவி கவுசர் (34). கடந்த சில நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த அவர் பேரணாம்பட்டு அரசு மருத்துவமனை யில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். அதன்பிறகும் கவுசருக்கு காய்ச்சல் இருந்ததால் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கும் குணமாகாததால் கவுசர் வேலூர் தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் வழியிலேயே பரிதாபமாக இறந்தார்.

பேரணாம்பட்டை அடுத்த கோக்கலூரை சேர்ந்தவர் குமரேசன். இவருடைய மகள் காவ்யா (3½), கடந்த 10 நாட்களுக்கு முன்பு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு பேரணாம்பட்டு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாள். பின்னர் மேல்சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் அனு மதிக்கப்பட்டாள். அங்கு சிகிச்சை பலனின்றி காவ்யா பரிதாபமாக இறந்தாள். கவுசர் மற்றும் காவ்யாவுக்கு ஏற்பட்ட காய்ச்சல் எந்த வகையானது என்பது உறுதிப்படுத்தப்படவில்லை.

நாமக்கல்- மோகனூர் சாலை கொண்டிசெட்டிப்பட்டி கணபதிநகரை சேர்ந்தவர் யோகேந்திரன். இவருடைய மகள் ரோஷினிக்கு (5) சில நாட்களுக்கு முன்பு திடீரென மர்ம காய்ச்சல் ஏற்பட்டதால் நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக நேற்று அதிகாலை ரோஷினி சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டாள். அங்கு ரோஷினியை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் மூளை காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இறந்ததாக கூறினர்.

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தை அடுத்த பொட்டல் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவருடைய மகன் பாரதிராஜா (வயது 32). கல்லூரி பேராசிரியர். இவருக்கும், கீரணூரைச் சேர்ந்த முத்துசெல்வி என்பவருக்கும் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. தற்போது முத்துசெல்வி 4 மாத கர்ப்பமாக உள்ளார். கடந்த 8 நாட்களுக்கு முன்பு பாரதிராஜாவுக்கு திடீரென்று காய்ச்சல் ஏற்பட்டது. அவர் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ரத்த பரிசோதனை செய்த போது டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருந்தது தெரியவந்தது. அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று காலையில் பாரதிராஜா உயிரிழந்தார்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு பொட்டிசெட்டிபட்டியை சேர்ந்தவர் கணேசன். அவருடைய மகன் பாவேந்திரன் (வயது 6). 1-ம் வகுப்பு மாணவன். இவனுக்கு கடந்த 3 நாட்களுக்கு முன்பு திடீ ரென காய்ச்சல் ஏற்பட்டது. உடனே அவனை அம்மையநாயக்கனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத் தில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக அவனை மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பாவேந்திரன் பரிதாபமாக இறந்தான். மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு பாவேந்திரன் இறந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த மாணவ, மாணவிகள் பள்ளிக்கூடத்துக்கு செல்லாமல் வகுப்புகளை புறக்கணித்து பள்ளி முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் இறந்த மாணவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக பள்ளிக்கு விடுமுறை அளித்து தலைமை ஆசிரியர் உத்தரவிட்டார். 

Related Tags :
Next Story