மத்திய அரசின் நிதி உதவியுடன் 10 ஆயிரம் பள்ளிக்கூடங்களில் ஸ்மார்ட் வகுப்புகள் அமைக்கப்படும்


மத்திய அரசின் நிதி உதவியுடன் 10 ஆயிரம் பள்ளிக்கூடங்களில் ஸ்மார்ட் வகுப்புகள் அமைக்கப்படும்
x
தினத்தந்தி 21 Oct 2017 11:00 PM GMT (Updated: 2017-10-22T03:23:00+05:30)

மத்திய அரசின் நிதி உதவியுடன் 10 ஆயிரம் பள்ளிக்கூடங்களில் ஸ்மார்ட் வகுப்புகள் அமைக்கப்படும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.

ஈரோடு,

ஈரோடு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, கலைமகள் மேல்நிலைப்பள்ளி மற்றும் செங்குந்தர் மேல்நிலைப்பள்ளிக்கூடத்தில் படிக்கும் மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா நேற்று நடந்தது.

விழாவில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகளை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழக மாணவ-மாணவிளுக்கு ஸ்மார்ட் அடையாள அட்டை வழங்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. வருகிற டிசம்பர் மாதம் இறுதிக்குள் ஸ்மார்ட் அட்டைகள் வழங்கப்படும்.

இந்த ஸ்மார்ட் அட்டையில் சிம் கார்டு பொருத்த வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியது. ஆனால் அது மாணவ-மாணவிகளுக்கு பாதுகாப்பானது இல்லை என்பதால் சிம் கார்டு பொருத்துவது தவிர்க்கப்பட்டு உள்ளது.

தற்போது தமிழ்நாட்டில் உள்ள 3 ஆயிரம் பள்ளிக்கூடங்களுக்கு ஸ்மார்ட் வகுப்புகள் தலா ரூ.2 லட்சம் செலவில் அமைக்கப்பட உள்ளது. அடுத்த ஆண்டு மத்திய அரசின் நிதியை பெற்று 10 ஆயிரம் பள்ளிக்கூடங்களில் ஸ்மார்ட் வகுப்புகள் அமைக்கப்படும். 9, 10, 11, 12 ஆகிய வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு முற்றிலும் கணினி கல்வி அளிக்கும் வகையில் ரூ.486 ஆயிரம் கோடியில் திட்டமிடப்பட்டு உள்ளது.

மத்திய அரசின் பொதுத்தேர்வுகளை தமிழக மாணவ-மாணவிகள் சுலபமாக எதிர்கொள்ளும் வகையில் 412 மையங்கள் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அது 450 ஆக உயர்த்தி தொடங்கப் படும். இந்த மையங்களில் சேர விரும்பும் மாணவ-மாணவிகள் அதற்கான இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். இதற்கு பள்ளிக்கூட தலைமை ஆசிரியர்கள் உதவி செய்வார்கள். பதிவு செய்தவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படும். மேலும் வகுப்பு நடைபெறும் கால அட்டவணையும் தெரிவிக்கப்படும். இந்த மையங்களில் வகுப்பு எடுக்க ஏற்கனவே 54 ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது. அவர்கள் 3 ஆயிரம் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பார்கள். இந்த 3 ஆயிரம் ஆசிரிய-ஆசிரியைகளும் 450 மையங்களில் மாணவ- மாணவிகளுக்கு சிறந்த பயிற்சி அளிப்பார்கள்.

இதுபோல் இந்தியா முழுவதும் மத்திய அரசின் போட்டித்தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் 1,482 மையங்கள் நடத்தி வரும் தனியார் நிறுவனத்தினரும் ஒரு ஆண்டுக்கு தமிழக மாணவ- மாணவிகளுக்கு இலவசமாக பயிற்சி அளிக்க ஒப்புதல் அளித்து உள்ளனர். இதன் மூலம் இந்திய அளவில் எந்த தேர்வு நடந்தாலும் தமிழக மாணவர்கள் வெற்றி பெற்று சாதனை படைக்கும் நிலை வரும்.

தற்போது மத்திய அரசு கொண்டு வந்து உள்ள ‘அடல் ஆய்வகம்’ என்ற அறிவியல் ஆய்வகங்கள் தமிழகத்தில் 12 பள்ளிக்கூடங்களில் அமைக் கப்பட்டு உள்ளது. இந்த மையங்களை சட்டமன்ற தொகுதிக்கு ஒரு ஆய்வகம் வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்து இருக்கிறோம். இந்த ஆய்வகங்கள் அமைக்கப்படும்போது இளம் விஞ்ஞானிகள் தங்கள் திறமையை வெளிக்கொண்டு வர முடியும்.

தமிழகத்தில் சுமார் 12 லட்சம் மாணவ-மாணவிகள் கற்றலில் குறைபாடு என்ற பிரச்சினையில் உள்ளனர். அவர்களுக்கு வகுப்பறைகளிலேயே பயிற்சி அளிக்கப்பட்டு 100 சதவீதம் சிறந்த மாணவர்களாக மாற்ற திட்டமிடப்பட்டு உள்ளது.

புதிய பாடத்திட்டம் செயல்பாட்டுக்கு வந்த பின்னர் பிளஸ்-2 முடித்த மாணவ-மாணவிகள் தொழில் செய்து சம்பாதிக்கும் தகுதியுடன் வெளி வருவார்கள். அவர்கள் உயர்படிப்பு படித்துக்கொண்டே வேலை செய்யும் ஆற்றல் மிக்கவர்களாக வருவார்கள். இதுபோல் பள்ளிக்கூடங்களில் படிக்கும் அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் விபத்து காப்பீட்டு திட்டம் கொண்டு வரப்பட உள்ளது.

அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் அடுத்த ஆண்டு (2018) ஜனவரி மாதம் கட்டணமில்லாத ஐ.ஏ.எஸ். பயிற்சி மையங்கள் தொடங்கப் படும்.

இவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார். 

Related Tags :
Next Story