கல்யாண் ரெயில் நிலையத்தில் நடைபாதை வியாபாரிகளை நவநிர்மாண் சேனாவினர் விரட்டி அடித்தனர்


கல்யாண் ரெயில் நிலையத்தில் நடைபாதை வியாபாரிகளை நவநிர்மாண் சேனாவினர் விரட்டி அடித்தனர்
x
தினத்தந்தி 22 Oct 2017 3:38 AM IST (Updated: 22 Oct 2017 3:38 AM IST)
t-max-icont-min-icon

கல்யாண் ரெயில் நிலையத்தில் நடைபாதை வியாபாரிகளை நவநிர்மாண் சேனாவினர் விரட்டி அடித்தனர்.

மும்பை,

மும்பையில் கடந்த மாதம் ரெயில் நிலைய நடைமேம்பாலத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 23 பேர் பலியானார்கள். இதற்கு நடைமேம்பாலத்தில் நடைபாதை வியாபாரிகளின் ஆக்கிரமிப்பும் முக்கிய காரணமாக கருதப்பட்டது.

இந்த துயர சம்பவத்தை கண்டித்து கடந்த 5–ந்தேதி நவநிர்மாண் சேனா கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், கலந்துகொண்டு பேசிய அக்கட்சி தலைவர் ராஜ்தாக்கரே, ரெயில் நிலையங்களில் நடைபாதை வியாபாரிகளை அப்புறப்படுத்த மத்திய மற்றும் மேற்கு ரெயில்வேக்கு 15 நாள் கெடு விதித்தார்.

அதற்குள் ரெயில் நிலையங்களில் இருந்து நடைபாதை வியாபாரிகளை முற்றிலுமாக அப்புறப்படுத்தாவிட்டால் 16–வது நாள் தனது கட்சியினர் அந்த பணியை செய்வார்கள் என்றும் எச்சரித்தார்.

ராஜ்தாக்கரேயின் 15 நாள் கெடு முடிவடைந்த நிலையில், ரெயில் நிலையங்களில் ஆக்கிரமித்து இருந்த நடைபாதை வியாபாரிகளை அப்புறப்படுத்தும் நடவடிக்கையில் நவநிர்மாண் சேனா கட்சியினர் நேற்று ஈடுபட்டனர். இதற்காக அவர்கள் ரெயில் நிலையங்களில் திரண்டனர்.

மெயின் வழித்தடத்தில் உள்ள கல்யாண் ரெயில் நிலையத்திற்கு வந்த நவநிர்மாண் சேனாவினர் அங்குள்ள நடைமேம்பாலத்தில் இருந்த 25–க்கும் மேற்பட்ட நடைபாதை வியாபாரிகளை விரட்டி அடித்தனர். மேலும் ரெயில்நிலைய பகுதிகளில் இருந்த நடைபாதை வியாபாரிகளும் விரட்டி அடிக்கப்பட்டனர். அவர்கள் விற்பனைக்கு வைத்திருந்த பொருட்களையும் நவநிர்மாண் சேனாவினர் அள்ளி வீசி சூறையாடினார்கள். இதனால் அங்கு பரபரப்பு உண்டானது.

மும்பையின் பிரதான ரெயில் நிலையமான தாதர் ரெயில் நிலையத்திலும் நவநிர்மாண் சேனாவினர் திரண்டனர். அதற்கு முன்னரே மாநகராட்சியினர் தாதர் ரெயில் நிலைய பகுதி மற்றும் பரபரப்பாக காணப்படும் ரானடே ரோடு பகுதியில் இருந்து நடைபாதை வியாபாரிகளை அப்புறப்படுத்தினார்கள். மேலும் அவர்களது பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.

இதனால் ரானடே ரோடு பகுதி நேற்று வெறிச்சோடி காணப்பட்டது.


Next Story