காரைக்கால் பகுதி வளர்ச்சிக்கு தனியார், பொதுத்துறை நிறுவனங்கள் உதவ வேண்டும்


காரைக்கால் பகுதி வளர்ச்சிக்கு தனியார், பொதுத்துறை நிறுவனங்கள் உதவ வேண்டும்
x
தினத்தந்தி 22 Oct 2017 4:28 AM IST (Updated: 22 Oct 2017 4:27 AM IST)
t-max-icont-min-icon

காரைக்கால் பகுதி வளர்ச்சிக்கு இங்குள்ள தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் உதவ வேண்டும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.

காரைக்கால்,

காரைக்கால் மாவட்டத்தில் குற்றங்களை குறைக்கும் வகையில் ஓ.என்.ஜி.சி, புதுச்சேரி மின்திறல் குழுமம் மற்றும் புதுச்சேரி அரசின் பங்களிப்புடன் ரூ.88.73 லட்சம் செலவில் 23 இடங்களில் 52 அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. இந்த கண்காணிப்பு கேமராக்கள் அனைத்தும் காரைக்கால் மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தனி கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்பட்டுள்ளது.
இதன் தொடக்க விழா காரைக்கால் மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள காமராஜர் திடலில் நேற்று மாலை நடைபெற்றது. விழாவில் முதல்-அமைச்சர் நாராயணசாமி கலந்துகொண்டு கண்காணிப்பு கேமராக்களை ரிமோட் மூலம் பொத்தானை அழுத்தி இயக்கிவைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

கண்காணிப்பு கேமராக்கள் செயல்பாட்டின் மூலம் காரைக்கால் பகுதியில் நடைபெறும் குற்றங்களை குறைக்க முடியும். நாங்கள் ஆட்சிக்கு வந்து ஒரு ஆண்டு நான்கு மாதங்கள் ஆகிறது. மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்ற முனைப்புடன் செயல்பட்டு வருகிறோம். மத்தியில் மாற்றுக்கட்சி ஆட்சியில் இருந்தாலும், புதுச்சேரி மாநிலத்தின் வளர்ச்சிக்காக அவர்களை அணுகி தேவையான நிதியையும், திட்டங்களையும் பெற முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். மற்ற மாநிலங்களை ஒப்பிட்டு பார்க்கும்போது மக்கள் நல்வாழ்வு திட்டங்களுக்கு எங்கள் அரசு முன்னுரிமை அளித்து வருகிறது. ஆனால் மாநிலத்திற்கு தேவையான வருவாயைத்தான் பெருக்க முடியாத நிலை உள்ளது.

முந்தையை ஆட்சியில் மாநிலத்தின் வருவாயை பெருக்கவும், மத்திய அரசிடமிருந்து கிடைக்க வேண்டிய நிதியை கேட்டுப்பெறவும் எந்த விதமான நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. தற்போது 15-வது மத்திய நிதிக்கமிஷனில் புதுச்சேரி மாநிலத்தை அங்கீகரித்து சேர்த்துள்ளார்கள். இது எங்களின் முயற்சிக்கு கிடைத்த வெற்றியாகும். இதன் மூலம் இனி 42 சதவீத நிதி கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

புதுச்சேரி மற்றும் காரைக்காலில் சட்டம்-ஒழுங்கு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் மூலம் புதுச்சேரி மற்றும் காரைக்காலுக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. கடந்த ஆயுத பூஜையின்போது தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறையாக வந்தது. இந்த 3 நாட்களில் மட்டும் புதுச்சேரிக்கு சுமார் ஒரு லட்சம் சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர்.
காரைக்கால் பகுதி ஆன்மிக சுற்றுலாத் தலமாக விளங்கி வருகிறது. எனவே இங்கு அதிகளவிலான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். எனவே அவர்களுக்கு பாதுகாப்பு தரவேண்டிய கட்டாயம் அரசுக்கு உள்ளது. சுற்றுலாவுக்கு முதுகெலும்பே சட்டம்-ஒழுங்கு பராமரிப்புதான். சுற்றுலா வளர்ச்சி அடைந்தால்தான் வர்த்தகம் பெருகும்.

பணம் மதிப்பிழப்பு மற்றும் ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் நாடு முழுவதும் பொருளாதாரம் மிகப்பெரிய அளவில் வீழ்ச்சி அடைந்துள்ளது. காரைக்கால் பகுதி வளர்ச்சிக்கு இங்குள்ள தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் உதவவேண்டும். புதுச்சேரி நகர பகுதியில் மின்சார பஸ் விட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. காரைக்கால் மாவட்ட காவல்துறைக்கு 10 புதிய வாகனங்கள் விரைவில் வழங்கப்படும்.
இவ்வாறு முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசினார்.

விழாவில் அமைச்சர் கமலக் கண்ணன், தமிழ்நாடு தொலைத்தொடர்பு வட்ட முதன்மை பொதுமேலாளர் சந்தோஷம், ஓ.என்.ஜி.சி. பொது மேலாளர் சுபிர் காகடி, புதுச்சேரி மின்திறல் குழுமம் கண்காணிப்பு பொறியாளர் ரவிச்சந்திரன் சந்தோஷ், மாவட்ட கலெக்டர் கேசவன், போலீஸ் டி.ஜி.பி சுனில்குமார் கவுதம், எம்.எல்.ஏ.க்கள் அசனா, கீதா ஆனந்தன் மற்றும் பலர் கலந்துகொண்டனர். முன்னதாக மாவட்ட சீனியர் போலீஸ் சூப்பிரண்டு சந்திரன் வரவேற்றார்.

Next Story