தொடரும் டெங்கு தடுப்பு நடவடிக்கை சுகாதாரமற்ற வீடு- கடைகளுக்கு அபராதம்


தொடரும் டெங்கு தடுப்பு நடவடிக்கை சுகாதாரமற்ற வீடு- கடைகளுக்கு அபராதம்
x
தினத்தந்தி 21 Oct 2017 11:09 PM GMT (Updated: 21 Oct 2017 11:09 PM GMT)

டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையின் தொடர்ச்சியாக, சுகாதாரமற்ற வீடு, கடைகளுக்கு கலெக்டர் வீரராகவராவ் அபராதம் விதித்தார்.

மதுரை,

டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக மதுரை மாவட்ட கலெக்டர் வீரராகவராவ், மாநகராட்சி கமிஷனர் அனீஷ்சேகர் ஆகியோர் பல்வேறு பகுதிகளில் ஆய்வு நடத்தி வருகிறார்கள். சுகாதாரம், தூய்மையான பராமரிப்பு இல்லாத, தண்ணீர்தேங்கி கிடக்கும் அரசு, தனியார் அலுவலகங்கள், மருத்துவமனை, குடியிருப்புகளுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது. மதுரை நகர் மட்டுமல்லாது மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் இந்த ஆய்வுநடந்து வருகிறது.

அதன் தொடர்ச்சியாக கலெக்டர் வீரராகவராவ் நேற்றும் ஆய்வுபணியை மேற்கொண்டார். கருப்பாயூரணியில் பொதுமக்களிடம் வீடுகளில் தண்ணீர் சேமிப்பு தொட்டி, தண்ணீர் சேமிப்பு பாத்திரங்களை தூய்மையாக வைத்துக்கொள்ளும்படியும், தண்ணீர் தொட்டிகளில் ஏடிஸ் கொசு புழுக்கள் உருவாவதை தடுப்பதற்கான அறிவுரைகளையும் வழங்கினார்.

அங்கு சுகாதாரமில்லாமல் இருந்த பாண்டித்துரை, பாண்டீசுவரி ஆகியோரது டீக்கடைகள், நிஷா, பக்கீர் ஆகிய பிராய்லர்கோழி விற்பனை கடைகள், முனியம்மாள் வீடடிற்கும் தலா ஆயிரம்ரூபாய் அபராதம் விதித்தார். பாஸ்கர் டீக்கடைக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. சாலை ஓரம்உள்ளஆக்கிரமிப்புகளை அகற்றவும் உத்தரவிட்டார். பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறை சார்பில் காய்ச்சல் பரிசோதனை மற்றும் சிகிச்சை முகாமை பார்வையிட்டு பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயத்தை வழங்கினார்.

அதைதொடர்ந்து மாரியம்மன் தெப்பக்குளம் அருகில் டெங்கு காய்ச்சலை முழுவதுமாக அகற்றுவது குறித்து கல்லூரி மாணவ, மாணவியர்கள் கலெக்டர் தலைமையில் விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். கொந்தகை கால்வாயை தூர்வாரவும், ஆக்கிரமிப்புகளை அகற்றவும் உத்தரவிட்டார். மேலும் குப்பைத்தொட்டி வைக்காத இரண்டு கடைகளுக்கு மொத்தம் ரூ.3 ஆயிரம் அபராதம் விதித்தார்.

ஆய்வின்போது மாநகராட்சி கமிஷனர் அனிஷ் சேகர், தாசில்தார்கள் சேமசுந்தரசீனிவாசன், சுந்தரமுருகன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சூரியகாந்தி, முருகன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் உடன்சென்றனர்.

Next Story