வங்கி மேலாளர் போல் பேசி மர்மநபர் கைவரிசை விவசாயியிடம் நூதன முறையில் ரூ.98 ஆயிரம் மோசடி
விவசாயியிடம் வங்கி மேலாளர் போல் பேசி ஏ.டி.எம். கார்டு எண், ரகசிய குறியீட்டு எண்ணை பெற்று ரூ.98 ஆயிரத்தை நூதன முறையில் மோசடி செய்த மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.
நாங்குநேரி,
நாங்குநேரி போலீஸ் சரகம் கலுங்கடியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 65). விவசாயி. சம்பவத்தன்று இவரது செல்போனுக்கு மர்மநபர் ஒருவர் தொடர்பு கொண்டு பேசினார். அவர் தன்னை வங்கி மேலாளர் என்று கூறிக் கொண்டு, உங்களது ஏ.டி.எம். கார்டு காலாவதியாகி விட்டது. எனவே புதிய கார்டுக்காக ஏ.டி.எம். கார்டு எண் மற்றும் ரகசிய எண்ணை கொடுங்கள் என்று கேட்டு உள்ளார்.
அதை உண்மை என்று நம்பிய பாலகிருஷ்ணன், அவரிடம் ஏ.டி.எம். கார்டு எண்ணையும், ரகசிய எண்ணையும் கூறியுள்ளார். அடுத்த சில நிமிடங்களில் பாலகிருஷ்ணனின் செல்போனுக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில் பாலகிருஷ்ணனின் வங்கி கணக்கில் இருந்து ரூ.98 ஆயிரம் எடுக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.
ரூ.98 ஆயிரம் மோசடிஇதனால் அதிர்ச்சி அடைந்த பாலகிருஷ்ணன் உடனே உரிய வங்கிக்கு சென்று விவரம் கேட்டார். அப்போது வங்கி ஊழியர்கள், உங்களிடம் நாங்கள் யாரும் பேசவில்லை என்று கூறினர். அப்போதுதான், மர்மநபர் தன்னிடம் ஏ.டி.எம். கார்டு எண் மற்றும் ரகசிய குறியீட்டு எண்ணை பெற்று நூதன முறையில் பணத்தை மோசடி செய்து விட்டதை அவர் உணர்ந்தார்.
இதுகுறித்து பாலகிருஷ்ணன் நாங்குநேரி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் மர்மநபரை பிடிக்க நாங்குநேரி உதவி போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன், இன்ஸ்பெக்டர் சுரேஷ் பெலிக்ஸ் பீட்டர், தனிப்பிரிவு சப்–இன்ஸ்பெக்டர் அசோகன் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த தனிப்படையினர் மர்மநபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.