முக்கூடல் அருகே விவசாயி தலையில் அம்மிக்கல்லை போட்டு கொன்றவருக்கு ஆயுள் தண்டனை
முக்கூடல் அருகே விவசாயி தலையில் அம்மிக்கல்லை போட்டு கொன்றவருக்கு நெல்லை கோர்ட்டில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
நெல்லை,
முக்கூடல் அருகே விவசாயி தலையில் அம்மிக்கல்லை போட்டு கொன்றவருக்கு நெல்லை கோர்ட்டில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
விவசாயிகள்நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள உடையாம்புளி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் இசக்கிமுத்து மகன் மாரிமுத்து (வயது 43). விவசாயி. இதே தெருவை சேர்ந்தவர் சிவனார்(வயது 44). இவரும் விவசாயி ஆவார். இவர்கள் இருவரும் அக்காள், தங்கையை திருமணம் செய்து கொண்டனர்.
இந்த நிலையில் மாரிமுத்துவுக்கும், அவருடைய மனைவி தேவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் தேவி, கணவரிடம் கோபித்துக்கொண்டு தந்தை வீட்டுக்கு சென்று விட்டார். இதற்கு தேவியின் அக்காள் இசக்கியம்மாளின் கணவர் சிவனார் தான் காரணம் என்று மாரிமுத்து கருதினார். மேலும் சிவனாருக்கும், தேவிக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருக்கலாம் என்றும் அவர் சந்தேகம் அடைந்தார்.
படுகொலைஇது தொடர்பாக மாரிமுத்துக்கும், சிவனாருக்கும் இடையே அவ்வப்போது தகராறு ஏற்பட்டு, முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த 17.7.2015 அன்று சிவனாரும், அவருடைய மனைவி இசக்கியம்மாளும் தெருவில் நடந்து சென்றனர்.
அப்போது அங்கு வந்த மாரிமுத்து, சிவனாரை அடித்து தனது வீட்டுக்குள் இழுத்துச் சென்றார். பின்னர் அவரை சுவற்றில் மோதி தள்ளினார். இதில் மயக்கம் அடைந்து கீழே விழுந்து கிடந்த சிவனார் தலையில் மாரிமுத்து அம்மிக்கல்லை தூக்கிப் போட்டார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்து சிவனார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
ஆயுள் தண்டனைஇதுகுறித்து முக்கூடல் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாரிமுத்துவை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை நெல்லை மாவட்ட முதன்மை அமர்வு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. நீதிபதி ராஜசேகர் வழக்கை விசாரித்து நேற்று தீர்ப்பு அளித்தார்.
இதில் மாரிமுத்துக்கு ஆயுள் தண்டனையும், ரூ.2,500 அபராதமும் விதித்து உத்தரவிட்டார். இந்த வழக்கில் போலீசார் தரப்பில் அரசு வக்கீல் சிவலிங்கமுத்து ஆஜராகி வாதாடினார்.