சர்க்கரை விலை உயர்வை கண்டித்து அனைத்து ரே‌ஷன் கடைகள் முன்பு ஆர்ப்பாட்டம் தி.மு.க.வினர் நடத்துகிறார்கள்


சர்க்கரை விலை உயர்வை கண்டித்து அனைத்து ரே‌ஷன் கடைகள் முன்பு ஆர்ப்பாட்டம் தி.மு.க.வினர் நடத்துகிறார்கள்
x
தினத்தந்தி 1 Nov 2017 4:30 AM IST (Updated: 31 Oct 2017 10:15 PM IST)
t-max-icont-min-icon

சர்க்கரை விலை உயர்த்தப்பட்டதை கண்டித்து வருகிற 6–ந்தேதி திருச்சி மாவட்டம் முழுவதும் அனைத்து ரே‌ஷன் கடைகள் முன்பாகவும் ஆர்ப்பாட்டம் நடத்துவது என தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருச்சி,

திருச்சி தெற்கு மற்றும் வடக்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் நேற்று திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நடந்தது. அவை தலைவர்கள் பேரூர் தர்மலிங்கம், அம்பிகாபதி தலைமை தாங்கினார்கள். கூட்டத்தை தொடங்கி வைத்து தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் கே.என்.நேரு எம்.எல்.ஏ. பேசினார்.

அவர் பேசும்போது ‘தி.மு.க. ஆட்சியில் மக்கள் நல திட்டங்கள் ஏராளமாக நிறைவேற்றப்பட்டன. ஆனால் இன்று ஆட்சியில் இருப்பவர்கள் மக்களை பற்றி கவலைப்படவில்லை. தங்களது பதவியை தக்க வைப்பதிலேயே குறியாக இருக்கிறார்கள். இந்த ஆட்சி இன்றோ நாளையோ என இருக்கிறது. அவர்களுக்கு மக்களை பற்றியும், திட்டங்களை நிறைவேற்றுவது பற்றியும் துளி அளவு கூட கவலை இல்லை. ரே‌ஷன் கடைகளில் சர்க்கரை விலை உயர்த்தப்பட்டு இருப்பது ஏழை எளிய, நடுத்தர மக்களை பெரிதும் பாதிக்கும். எனவே இதனை கண்டித்து நடைபெற உள்ள ஆர்ப்பாட்டங்களில் பொது மக்களை அதிக அளவில் பங்கு பெற செய்யவேண்டும்’ என்றார்.

இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:–

தமிழக அரசு ரே‌ஷன் கடைகளில் சர்க்கரை விலையை விண்ணளவு உயர்த்தி மக்களின் வயிற்றில் அடித்ததை கண்டித்து தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் ஆணைக்கிணங்க திருச்சி மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து ரே‌ஷன் கடைகளின் முன்பாகவும் வருகிற 6–ந்தேதி (திங்கட்கிழமை) ஆர்ப்பாட்டம் நடத்துவது. இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளானவர்கள் கலந்து கொண்டு நமது சக்தியை நிரூபித்து காட்டுவது.

பணமதிப்பு இழப்பு நடவடிக்கையால் நமது பொருளாதாரத்தை சீரழித்த மத்திய பாரதீய ஜனதா அரசை கண்டித்து வருகிற 8–ந்தேதி (புதன்கிழமை) திருச்சியில் கருப்பு சட்டை அணிந்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது. கழகத்தின் உறுப்பினர் சேர்த்தல், புதுப்பித்தல், பணியினை வெகு விரைவாகவும், சிறப்பாகவும் பணியாற்றி மிக அதிக அளவில் உறுப்பினர்களை சேர்ப்பது, திருச்சி மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மக்கள் அதிக அளவில் இருப்பதால் மாவட்டம் முழுவதும் நிலவேம்பு கசாயத்தினை கழகத்தினர் தொடர்ந்து வழங்கவேண்டும் என கேட்டுக்கொள்வது.

மேற்கண்டவை உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் எம்.எல்.ஏ. அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட செயலாளர்கள், மாநகர, நகர, ஒன்றிய, பகுதி, கிளை கழக செயலாளர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Next Story