கையகப்படுத்திய நிலத்துக்கு இழப்பீடு வழங்காததால் பழனி சப்–கலெக்டர் அலுவலகத்தை ஜப்தி செய்ய கோர்ட்டு உத்தரவு


கையகப்படுத்திய நிலத்துக்கு இழப்பீடு வழங்காததால் பழனி சப்–கலெக்டர் அலுவலகத்தை ஜப்தி செய்ய கோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 1 Nov 2017 4:15 AM IST (Updated: 1 Nov 2017 12:17 AM IST)
t-max-icont-min-icon

பழனி அருகேயுள்ள சிவகிரிப்பட்டி ஊராட்சி தட்டான்குளம் பகுதியில் அரசு சித்த மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை கட்டுவதற்கு 40 ஏக்கர் நிலத்தை அரசு கையகப்படுத்தியது.

பழனி,

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகேயுள்ள சிவகிரிப்பட்டி ஊராட்சி தட்டான்குளம் பகுதியில் அரசு சித்த மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை கட்டுவதற்கு 40 ஏக்கர் நிலத்தை அரசு கையகப்படுத்தியது. அப்போது அந்த நில உரிமையாளர்களுக்கு நிர்ணயம் செய்யப்பட்ட தொகை குறைவாக இருப்பதாக கூறி நில உரிமையாளர்கள் திண்டுக்கல் சப்–கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். பின்னர் அந்த வழக்கு 1994–ம் ஆண்டு பழனி சப்–கோர்ட்டுக்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்தது.

இந்த வழக்கில் 2009–ம் ஆண்டு வழங்கிய தீர்ப்பில், ஒரு சென்ட் நிலத்துக்கு ரூ.4 ஆயிரமும், அதற்குரிய வட்டியும் சேர்த்து வழங்க வேண்டும் என்று கூறப்பட்டது. இதை தொடர்ந்து 2011–ம் ஆண்டு நில உரிமைதாரர்களுக்கு 50 சதவீத தொகை மட்டுமே வழங்கப்பட்டது. மீதமுள்ள தொகை வழங்கப்படவில்லை. இதுகுறித்து ஐகோர்ட்டில் அரசு மேல்முறையீடு செய்வதாக நில உரிமையாளர்களிடம் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் நில உரிமையாளர்கள் சார்பில் சிலர் நிலுவைத் தொகையை வழங்கவேண்டும் என்று பழனி சப்–கோர்ட்டில் நிறைவேற்றுதல் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவை விசாரித்து நில உரிமையாளர்களுக்கு மீதமுள்ள தொகைக்கு வட்டியுடன் சேர்த்து ரூ.3 கோடியே 75 லட்சம் தரவேண்டும். அந்த தொகையை தரவில்லையென்றால் சப்–கலெக்டர் அலுவலக பொருட்களை ஜப்தி செய்யும்படி சப்–கோர்ட்டு நீதிபதி கணேசன் நேற்று உத்தரவிட்டார். இதை தொடர்ந்து கோர்ட்டு ஊழியர்கள், நில உரிமையாளர்களுடன் சேர்ந்து சப்–கலெக்டர் அலுவலகத்துக்கு ஜப்தி செய்ய சென்றனர்.

இதுகுறித்து சப்–கலெக்டர் அருண்ராஜிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் கோர்ட்டு ஊழியர்களையும், நில உரிமையாளர்களையும் அழைத்து பேசினார். அப்போது 10 நாட்கள் கால அவகாசம் அளிக்கும்படி அவர் கேட்டுக்கொண்டார். இதை தொடர்ந்து கோர்ட்டு நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.


Next Story