கள்ளக்குறிச்சி, சின்னசேலம் பகுதியில் டெங்கு கொசு உற்பத்தியாக காரணமாக இருந்த 11 பேருக்கு ரூ.98 ஆயிரம் அபராதம்
கள்ளக்குறிச்சி, சின்னசேலம் பகுதியில் டெங்கு கொசுக்கள் உற்பத்தியாக காரணமாக இருந்த 11 பேருக்கு அதிகாரிகள் ரூ.98 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
கள்ளக்குறிச்சி,
விழுப்புரம் மாவட்டத்தில் பரவி வரும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுத்து நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் மாவட்டத்தில் டெங்கு கொசுக்கள் உற்பத்தியாக காரணமாக இருப்பவர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் கள்ளக்குறிச்சி கோட்டாட்சியர் மல்லிகா, நகராட்சி ஆணையாளர் லட்சுமி, சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் ஜெமினி, அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் சிவக்குமார் ஆகியோர் தலைமையிலான அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் நேற்று காலை கள்ளக்குறிச்சி நகரில் உள்ள தனியார் நிறுவனங்கள், கடைகள் மற்றும் வீடுகளுக்கு சென்று டெங்கு கொசு ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது சேலம் சாலையில் உள்ள ஒரு டைல்ஸ் விற்பனை நிலையத்துக்கு சொந்தமான குடோனில் அதிகாரிகள் ஆய்வு செய்தபோது, அங்கு திறந்தவெளியில் கிடந்த பீங்கான் உள்ளிட்ட பொருட்களில் தேங்கி நின்ற நீரில் டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அதிகாரிகள் டைல்ஸ் விற்பனை நிலைய உரிமையாளருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
இதேபோல் அதே சாலையில் டெங்கு கொசுக்கள் உற்பத்தியாக காரணமாக இருந்த சிமெண்டு பைப் தயாரிப்பு நிறுவன உரிமையாளருக்கு ரூ.10 ஆயிரமும், டயர் விற்பனை கடை உரிமையாளருக்கு ரூ.10 ஆயிரமும், மரக்கடை உரிமையாளருக்கு ரூ.10 ஆயிரமும், புதிதாக வீடுகள் கட்டிவரும் 3 பேருக்கு தலா ரூ.10 ஆயிரமும், செருப்பு விற்பனை கடை உரிமையாளருக்கு ரூ.2 ஆயிரமும், பீடா கடைக்காரருக்கு ரூ.500–ம், வீட்டின் உரிமையாளர் ஒருவருக்கு ரூ.500 அபராதமும் விதிக்கப்பட்டது.
விழுப்புரம்–புதுச்சேரி சுகாதாரத்துறை அலுவலர் பாலசுப்பிரமணியன் தலைமையிலான அதிகாரிகள் சின்னசேலம் பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது கனியாமூரில் உள்ள தனியாருக்கு சொந்தமான அரிசி ஆலை வளாகத்தில் இருந்த பேரல்களில் சேமித்து வைத்திருந்த நீரில் டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகி இருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். உடனே டெங்கு கொசு உற்பத்தியாக காரணமாக இருந்த அரிசி ஆலை உரிமையாளருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. தொடர்ந்து சின்னசேலம் துணை மின் நிலைய வளாகத்தில் அதிகாரிகள் ஆய்வு செய்தபோது, திறந்த வெளியில் கிடந்த மின்சாதன பொருட்களில் டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகும் வகையில் தண்ணீர் தேங்கி நின்றது. உடனே அதிகாரிகள், பணியாளர்கள் மூலம் தண்ணீரை அகற்றினர். தொடர்ந்து அதிகாரிகள், சின்னசேலம் துணை மின் நிலைய அதிகாரிக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கினார்கள்.