டிசம்பர் 12, 13–ந் தேதிகளில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் நாடு தழுவிய வேலைநிறுத்தம்
டிசம்பர் 12, 13–ந் தேதிகளில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் நாடு தழுவிய வேலைநிறுத்தம் செய்யப்போவதாக ஊழியர் சம்மேளன மாநில தலைவர் மதிவாணன் கூறினார்.
திருப்போரூர்,
தேசிய தொலைத்தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தின் திருப்போரூர் கிளை தொடக்க விழா திருப்போரூரில் நடைபெற்றது. தேசிய தொலைத்தொடர்பு ஊழியர் சம்மேளன மாவட்ட செயலாளர் ஏகாம்பரம் தலைமை தாங்கினார். கிளை செயலாளர் ராஜன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக தேசிய தொலைத்தொடர்பு ஊழியர் சம்மேளன மாநில தலைவர் மதிவாணன் கலந்து கொண்டார்.
பின்னர் மதிவாணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:–
10 ஆண்டுகளாக பணிபுரியும் பி.எஸ்.என்.எல். தொழிலாளர்களுக்கு ஊதிய விகித மாற்றம் செய்யாமல், நஷ்டத்தில் இயங்குவதாக மத்திய அரசு கூறி வருகிறது. தபால் துறைக்கு வழங்கப்படும் சலுகைகள் போல எங்களுக்கும் வழங்க மத்திய அரசு மறுக்கிறது.
மத்திய அரசு தனியார் நிறுவனத்துக்கு ஆதரவாக செய்கிறது. கூடிய விரைவில் பி.எஸ்.என்.எல். கட்டிடங்கள் தனியார் நிறுவனத்துக்கு விற்கப்படும் சூழ்நிலை ஏற்படும். தபால் துறை மேம்பாட்டு பணிக்கு செல்போன் சேவை வழங்க தனியார் நிறுவனத்திடம் மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. மத்திய அரசின் தனியார் மயம், ஊழியர் விரோத போக்கை கண்டித்து அனைத்து சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி டிசம்பர் 12, 13–ந் தேதிகளில் நாடு தழுவிய வேலைநிறுத்தம் செய்ய உள்ளோம். அதற்கு முன்பு பாராளுமன்ற முற்றுகை பேராட்டம் நடத்த இருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில் ஒப்பந்த தொழிலாளர் சம்மேளன மாவட்ட செயலாளர் மகேந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாநில அமைப்பு செயலாளர் முத்துக்கருப்பன் நன்றி கூறினார்.