‘பா.ஜனதா தான் சிவசேனாவின் பிரதான எதிரி’ சஞ்சய் ராவுத் எம்.பி. பேட்டி
‘‘ராகுல்காந்தியிடம் மாற்றம் வந்து விட்டது, பா.ஜனதா தான் சிவசேனாவின் பிரதான எதிரி’’ என்று அக்கட்சி தலைவர் சஞ்சய் ராவுத் எம்.பி. தெரிவித்தார்.
மும்பை,
பாரதீய ஜனதா தலைமையிலான மராட்டிய அரசு ஆட்சி பொறுப்பு ஏற்று நேற்றுடன் 3 ஆண்டு நிறைவடைந்தது. இந்த நிலையில், சிவசேனா தலைவர் சஞ்சய் ராவுத் எம்.பி., நாசிக்கில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.அவர் கூறும்போது, ‘‘அரசை பா.ஜனதா நிர்வகிக்கிறது. எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளை விமர்சிக்காமல், சிவசேனாவை பா.ஜனதா குறிவைக்கிறது. ஆகையால், அவர்கள் எங்கள் பிரதான எதிரி’’ என்றார்.
மேலும், ராகுல்காந்தி பற்றிய கேள்விக்கு பதில் அளித்த அவர், ‘‘ஒரு தலைவர் என்பவர் பொதுமக்களால் ஏற்றுக்கொள்ள கூடியவராக இருக்க வேண்டும். கடந்த 2014–ம் ஆண்டில் இருந்து ராகுல்காந்தியிடம் குறிப்பிடத்தக்க மாற்றம் வந்துவிட்டது. அவரது பேச்சை பொதுமக்கள் கவனிக்க தொடங்கி விட்டார்கள்’’ என்றார்.அத்துடன், 2019 பாராளுமன்ற தேர்தலையும், சட்டசபை தேர்தலையும் சந்திக்க உத்தவ் தாக்கரே தலைமையிலான கட்சி தயாராகி விட்டதாகவும் சஞ்சய் ராவுத் எம்.பி. குறிப்பிட்டார்.
மாநில மந்திரிசபையில் நாராயண் ரானே இடம்பெறுவது பற்றி நிருபர்கள் கேட்டதற்கு, ‘‘மந்திரிசபை விரிவாக்கம் பற்றிய வதந்தியை நீண்ட நாட்களாக நாங்கள் கேள்விப்படுகிறோம். அது நடக்கும் போது, கருத்து கூறுகிறேன்’’ என்றார்.
Related Tags :
Next Story