பள்ளிகொண்டாவில் பெண் போலி டாக்டர் கைது மற்றொருவர் தப்பி ஓட்டம்


பள்ளிகொண்டாவில் பெண் போலி டாக்டர் கைது மற்றொருவர் தப்பி ஓட்டம்
x
தினத்தந்தி 1 Nov 2017 3:45 AM IST (Updated: 1 Nov 2017 1:57 AM IST)
t-max-icont-min-icon

பள்ளிகொண்டாவில் எம்.பி.பி.எஸ்.படிக்காமலேயே நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த பெண் போலி டாக்டரை மருத்துவ துறை அதிகாரிகள் கையும் களவுமாக பிடித்தனர். அவரை போலீசார் கைது செய்தனர்.

அணைக்கட்டு,

பள்ளிகொண்டாவில் உள்ள சாவடி பகுதியில் புருசோத்தமன் என்பவரது மனைவி சங்கீதா (வயது 42) என்பவர் கிளினிக் நடத்தி வருகிறார். இவர் எம்.பி.பி.எஸ்.படிக்காமலேயே அலோபதி மருத்துவமுறையில் சிகிச்சை அளித்து வருவதாக மாவட்ட மருத்துவ துறைக்கு புகார்கள் வந்தன.

இதனையடுத்து நேற்று மதியம் வேலூர் ஊரக மருத்துவ இணை இயக்குனர் சாந்தி, மருத்துவ அதிகாரி ஹேமலதா ஆகியோர் சிகிச்சை பெறுவதுபோல் போலி டாக்டர் சங்கீதாவின் கிளினிக்கிற்கு சென்றனர். அப்போது அங்கு அவர் வயிற்றுவலி, தலைவலியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஊசி போட்டபோது கையும் களவுமாக பிடித்தனர்.

விசாரணையில் சங்கீதா எம்.பி.பி.எஸ்.படிக்காமல் எம்.எஸ்சி மட்டுமே படித்து விட்டு சிகிச்சை அளித்தது தெரியவந்தது. அவர் அதிகாரிகளிடம் வெளிமாநிலத்தில் மருத்துவம் சார்ந்த படிப்பு படித்ததாக சான்றிதழ் ஒன்றை காண்பித்தார். அவ்வாறு படித்தாலும் அதன் மூலம் சிகிச்சை அளிக்க முடியாது. மேலும் அந்த சான்றிதழ் மூலம் இங்கு மருத்துவ துறையில் பணியாற்ற தேர்வு ஒன்றை எழுதியிருக்க வேண்டும். எனவே முறைகேடாக சிகிச்சை அளித்த சங்கீதாவை அவர்கள் பள்ளிகொண்டா போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்து புகார் அளித்தனர். அதன்பேரில் சங்கீதாவை போலீசார் கைது செய்தனர்.

மற்றொருவர் தப்பி ஓட்டம்

இதேபோல் வெட்டுவாணத்தில் பெண் ஒருவர் முறைப்படி படித்து விட்டு மருந்துக்கடை நடத்தி வருகிறார். ஆனால் அவரது கணவர் செந்தில் எம்.பி.பி.எஸ்.படிக்காமலேயே சிகிச்சை அளிப்பதாக வந்த புகாரையடுத்து அங்கும் சோதனை நடத்துவதற்காக மருத்துவ துறை அதிகாரிகள் சென்றனர். ஆனால் முன்கூட்டியே இதனை அறிந்த செந்தில் தனது கிளினிக்கை மூடிவிட்டு ஓடிவிட்டார். இது குறித்தும் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது. 

Related Tags :
Next Story