இந்திரா காந்தி ஆட்சி காலத்தில் தான் பசுமை புரட்சி ஏற்பட்டது சித்தராமையா பேச்சு


இந்திரா காந்தி ஆட்சி காலத்தில் தான் பசுமை புரட்சி ஏற்பட்டது சித்தராமையா பேச்சு
x
தினத்தந்தி 31 Oct 2017 10:45 PM GMT (Updated: 31 Oct 2017 8:37 PM GMT)

இந்திரா காந்தி ஆட்சி காலத்தில் தான் பசுமை புரட்சி ஏற்பட்டது என்று சித்தராமையா கூறினார்.

பெங்களூரு,

கர்நாடக காங்கிரஸ் சார்பில் இந்திரா காந்தி நினைவு நாள் பெங்களூரு குயின்ஸ் ரோட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதில் முதல்–மந்திரி சித்தராமையா கலந்து கொண்டு, அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதில் சித்தராமையா பேசியதாவது:–

வறுமையை ஒழிக்கும் வகையில் ஏழைகளின் மேம்பாட்டிற்காக 20 அம்ச திட்டங்களை இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது செயல்படுத்தினார். மன்னராட்சி ஒழிப்பு, வங்கிகள் தேசியமயம், வறுமை ஒழிப்பு உள்ளிட்ட முக்கியமான திட்டங்களை அவர் துணிச்சலாக அமல்படுத்தினார்.

வங்கிகள் தேசியமயம் ஆக்கப்பட்டதால், சாமானிய மக்கள், ஏழைகள் வங்கிகளில் கடன் பெறும் நிலை உருவானது.

 இந்திரா காந்தி மக்களின் நலனுக்காக நேர்மையான முறையில் திட்டங்களை அமல்படுத்தினார். காங்கிரஸ் அரசு ஆதிதிராவிடர்கள், சிறுபான்மை மக்கள் மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவுகளை சேர்ந்தவர்களின் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்களை அமல்படுத்தியுள்ளது.

நகரங்களிலும் ஏழைகள் உள்ளனர் என்பதை கருதி பெங்களூருவில் மலிவு விலை இந்திரா உணவகம் திறந்துள்ளோம். குறைந்த விலையில் உணவுகளை மக்களுக்கு வழங்குகிறோம். மாவட்டங்கள் மற்றும் தாலுகா தலைநகரங்களிலும் இந்த உணவகங்களை திறக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். இந்த உணவகங்கள் முன்பு இந்திரா காந்தியின் உருவப்படத்தை வைத்துள்ளோம். நாட்டை பாதுகாப்பதில் திறமையாக செயல்பட்ட இந்திரா காந்தியை முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பாராட்டினார்.

இந்திரா காந்தி பாகிஸ்தானுக்கு தக்க பாடம் புகட்டி, வங்கதேச நாட்டை உருவாக்கி கொடுத்தார். பொற்கோவிலில் தீவிரவாதிகள் பதுங்கி இருந்தபோது ராணுவத்தை பயன்படுத்தி அவர்களை அழித்தார். இத்தகைய முடிவுகளை எடுத்த இந்திரா காந்தியை இரும்பு பெண்மணி என்று மக்கள் போற்றினர். அவருடைய ஆட்சி காலத்தில் தான் பசுமை புரட்சி ஏற்பட்டது. உணவு தானிய உற்பத்தியில் தன்னிறைவு அடைந்தோம்.

இவ்வாறு சித்தராமையா பேசினார்.


Next Story