இலக்கை அடைய மென்மேலும் பயணிக்க வேண்டியுள்ளது கவர்னர் கிரண்பெடி விடுதலை நாள் வாழ்த்து
இலக்கை அடைய மென்மேலும் பயணிக்க வேண்டியுள்ள என்று கவர்னர் கிரண்பெடி தனது விடுதலை நாள் வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார்.
புதுச்சேரி,
புதுவை விடுதலை நாளை முன்னிட்டு கவர்னர் கிரண்பெடி விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:–
புதுவையின் விடுதலை நாள் என்பது அடிமை தளத்தின் பிடியில் இருந்து பிரெஞ்சு இந்தியாவை விடுவித்து அதை தன் தாய்நாடான இந்தியாவுடன் இணைத்த நாளாகும். பிரெஞ்சுக்காரர்களின் பிடியில் இருந்த புதுச்சேரியை விடுதலை பெற செய்து அதற்கென்று தனியாக ஒரு சட்டமன்றத்தை உருவாக்கி அதை ஒரு யூனியன் பிரதேசமாக மாற்றிய பெருமை புதுச்சேரி விடுதலை வரலாற்றுக்கு உண்டு.
புதுச்சேரியின் வரலாற்றில் இந்த நாள் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய திருநாளாகும். புதுச்சேரி தனக்கென ஒரு தனிச்சிறப்பு கொண்ட பிரெஞ்சு இந்திய கலாசாரத்தை தக்க வைத்துக்கொண்டுள்ளது. ஒட்டுமொத்த சமூக, பொருளாதார மாற்றத்திற்கான இந்த நெடிய பயணத்தில், புதுச்சேரி ஒரு குறிப்பிட்ட தூரத்தை கடந்துள்ளது.
இருந்தபோதிலும் இலக்கை அடைய நாம் மென்மேலும் பயணிக்க வேண்டியுள்ளது. புதுச்சேரி விடுதலை நாளான இந்த நன்னாளில் புதுச்சேரி மக்களுக்கு நான் எனது இதயங்கனிந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அந்த வாழ்த்து செய்தியில் கவர்னர் கிரண்பெடி கூறியுள்ளார்.
ராதாகிருஷ்ணன் எம்.பி. விடுத்துள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:–
பிரெஞ்சிந்தியரின் ஆளுகைக்கு உட்பட்டிருந்த நம் புதுச்சேரி மாநிலம், இணைப்பு ஒப்பந்தத்தின் மூலம் இந்திய துணை கண்டத்துடன் இணைக்கப்பட்ட நவம்பர் 1–ந்தேதியை விடுதலை நாளாக கொண்டாடி வருகிறோம். பிரெஞ்சிந்திய விடுதலை போராட்டத்தில் எண்ணற்ற தியாகிகள் வீரமரணம் அடைந்தும் தங்கள் உடமைகளை இழந்தும், தலைமறைவு வாழ்க்கையின் மூலம் அல்லல்பட்டும் புதுச்சேரியின் விடுதலைக்கு வித்திட்டுள்ளனர். குறிப்பாக மக்கள் தலைவர் வ.சுப்பையா, குபேர், தியாகி அன்சாரி துரைசாமி, முத்துக்குமாரப்ப ரெட்டியார், வெங்கடசுப்பா ரெட்டியார் போன்றோர் புதுச்சேரி மக்களின் மனதில் விடுதலை தீயை வளர்த்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர்.
இந்த அற்புத மனிதர்களை நினைவுகூர்ந்து அவர்கள் பெற்றுத்தந்த விடுதலையை பேணி காக்க இத்தருணத்தில் நாம் சபதமேற்போம். புதுச்சேரியின் தனித்தன்மை பாதுகாக்கப்பட புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனாம் பிராந்தியங்கள் சமச்சீரான வளர்ச்சிபெற நம் மாநிலத்தின் கலாசாரத்தையும் தொன்மையையும், பாரம்பரியத்தையும் பாதுகாக்க சூளுரைப்போம்.
இவ்வாறு ராதாகிருஷ்ணன் எம்.பி. கூறியுள்ளார்.
அகில இந்திய என்.ஆர்.காங்கிரஸ் பொதுச்செயலாளர் பாலன் விடுத்துள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:–
ஏறத்தாழ 300 ஆண்டுகளுக்கும் மேலாக டேனிஷ், போர்த்துக்கீசியர், இங்கிலாந்து, பிரான்சு ஆகிய ஐரோப்பிய நாடுகளின் கீழ் அடிமைப்பட்டிருந்த நம் புதுவை பூமி இறுதியாக பன்னெடுங்காலம் சுமார் 250 ஆண்டுகள் பிரெஞ்சியரின் ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்ற நாள் 1954 நவம்பர் 1.
இந்திய விடுதலைப்போரை போலவே தீவிர போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், மறியல்கள், வேலை நிறுத்தங்கள் என்று வெகுஜன போராட்டங்களின் எல்லா வடிவங்களிலும் 8 ஆண்டுகள் தீவிரமாக ஈடுபட்டு இந்த விடுதலையை ஈன்றிட்ட விடுதலை போராட்ட வீரர்களை, தியாகிகளை நன்றியோடு வணங்குகிறோம். அவர்கள் சிந்திய கண்ணீரும், செந்நீரும் புதுச்சேரியின் வளர்ச்சிக்கு அடி உரமாய் பரவி வாழ்த்தி கொண்டிருக்கின்றன.
இன்னொரு முக்கிய செய்தியையும் இன்று நினைவு கூறவேண்டும். ஆகஸ்டு 16–ம் நாளினையே விடுதலை நாளாக கொண்டாடி பிழை செய்து வந்திருக்கிறோம். 60 ஆண்டுகளாக நிகழ்ந்து வந்த வரலாற்று திரிபை சரிசெய்து நேர்படுத்தியது. மக்கள் முதல்வர் ரங்கசாமிதான் என்பதையும் இத்தருணத்தில் மனதார பாராட்ட வேண்டும்.
பல்லாண்டு காலம் புறக்கணிக்கப்பட்ட வேண்டுகோளின் நியாயத்தை உணர்த்த அவர்தான் நீதியரசர் தாவீது அன்னுசாமி தலைமையில் ஆய்வுக்குழு அமைத்து பரிந்துரை பெற்று 2015–ல் நவம்பர் 1–ந்தேதிதான் புதுச்சேரியின் விடுதலை நாள் என அதிகாரப்பூர்வமாக ஆணையிட்டு உறுதி செய்தார்.
வரலாற்று பிழையை சரிசெய்த மக்கள் முதல்வரையும், விடுதலையை சாத்தியமாக்கிய நெஞ்சுரமிக்க தியாக மறவர்களையும் எங்களது அகில இந்திய என்.ஆர்.காங்கிரஸ் பேரியக்கம் நன்றியோடு நினைவு கூர்ந்து வணங்கி மகிழ்கிறது.
இவ்வாறு பாலன் கூறியுள்ளார்.