திருச்செந்தூரில் துணிகரம் என்ஜினீயர் வீட்டில் 15 பவுன் நகைகள் – ரூ.1¼ லட்சம் கொள்ளை


திருச்செந்தூரில் துணிகரம் என்ஜினீயர் வீட்டில் 15 பவுன் நகைகள் – ரூ.1¼ லட்சம் கொள்ளை
x
தினத்தந்தி 2 Nov 2017 2:00 AM IST (Updated: 1 Nov 2017 8:22 PM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூரில் என்ஜினீயர் வீட்டில் 15 பவுன் நகைகள், ரூ.1¼ லட்சத்தை கொள்ளை அடித்துச் சென்றவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

திருச்செந்தூர்,

திருச்செந்தூரில் என்ஜினீயர் வீட்டில் 15 பவுன் நகைகள், ரூ.1¼ லட்சத்தை கொள்ளை அடித்துச் சென்றவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:–

என்ஜினீயர்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் குறிஞ்சி நகரைச் சேர்ந்தவர் ஜெகநாதன் (வயது 58). இவருடைய மனைவி மடோனா. இவர்களுடைய மகன் கபிலன் (30). என்ஜினீயரான இவர் வெளிநாட்டில் கப்பலில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி ஜெனி.

கபிலன் கடந்த சில நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்தார். பின்னர் கடந்த 29–ந் தேதி கபிலன் தன்னுடைய குடும்பத்தினருடன் தூத்துக்குடியில் நடந்த உறவினரின் திருமண விழாவுக்கு சென்றார்.

நகைகள்– பணம் கொள்ளை

பின்னர் நேற்று மாலையில் கபிலன் குடும்பத்தினர் தங்களது வீட்டுக்கு திரும்பி வந்தனர். அப்போது அவர்களது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. மேலும் வீட்டில் உள்ள அறைகளின் கதவுகளும், அங்கிருந்த 3 பீரோக்களும் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தன. அவற்றில் இருந்த 15 பவுன் தங்க நகைகள், ரூ.1 லட்சத்து 40 ஆயிரத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதனைப் பார்த்து கபிலன் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.

வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள் நள்ளிரவில் அவரது வீட்டின் கதவுகள், பீரோக்களை உடைத்து, நகைகள், பணத்தை கொள்ளை அடித்துச் சென்றது தெரியவந்தது.

போலீசார் விசாரணை

இதுகுறித்து திருச்செந்தூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் ரகுராஜன், சப்–இன்ஸ்பெக்டர்கள் ரசலையன், பாஸ்கர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, என்ஜினீயர் வீட்டின் கதவை உடைத்து நகைகள், பணத்தை கொள்ளையடித்து சென்றவர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story