மழை, வெள்ளத்தால் பாதிக்கப்படும் பொதுமக்களை தங்க வைப்பதற்கு 191 மையங்கள் தயார் கலெக்டர் தகவல்


மழை, வெள்ளத்தால் பாதிக்கப்படும் பொதுமக்களை தங்க வைப்பதற்கு 191 மையங்கள் தயார் கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 2 Nov 2017 3:45 AM IST (Updated: 2 Nov 2017 12:57 AM IST)
t-max-icont-min-icon

மழை, வெள்ளத்தால் பாதிக்கப்படும் பொதுமக்களை தங்க வைப்பதற்கு 191 மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே தெரிவித்தார்.

கடலூர்,

வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வருவதையொட்டி கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. நேற்று 5–வது நாளாக மழை பெய்தது. இதனால் சாலை, மற்றும் தெருக்களில் வழிந்தோடிய மழைநீர் தாழ்வான பகுதிகளில் தேங்கி குளம்போல காட்சி அளித்தது.

இந்த நிலையில் பருவமழையை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் வெள்ள பாதிப்புகுள்ளாகக்கூடிய குடியிருப்பு பகுதிகளை கலெக்டர் பிராந்த் மு.வடநேரே நேரில் ஆய்வு செய்தார். முன்னதாக கடலூர்–நெல்லிக்குப்பம் சாலையில் உள்ள சாவடி கெடிலம் தெருவில் அமைக்கப்பட்டு வரும் மழைநீர் வடிகால் வாய்க்கால் பணியை கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே நேரில் பார்வையிட்டார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

கடந்த 2015–ம் ஆண்டில் ஏற்பட்ட மழைவெள்ளத்தால் கடலூர் கோண்டூர் பகுதியில் வடிகால் வசதி இல்லாததால் 10 நாட்களாக தண்ணீர் வடியாமல் இருந்தது. இந்த ஆண்டு அதுபோன்ற நிலை இருக்க கூடாது என்பதற்காக கடந்த 3 மாதங்களாக இந்த பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி வாய்க்கால் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதன் மூலம் குறைந்த அளவில் மழை பெய்தாலும் தண்ணீர் வடிந்துவிடும்.

அதேபோல் மாவட்டம் முழுவதும் வடிகால் வாய்க்கால்களை பொதுப்பணித்துறையினர் மூலம் துர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது. பிளாஸ்டிக் மற்றும் குப்பை கழிவுகளை வாய்க்கால்களில் கொட்டுவதால் அடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வடிய முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே பொதுமக்கள் யாரும் குப்பை மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை வாய்க்கால்களில் கொட்ட வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்.

கடலூர் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்கொள்வதற்காக 14 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு ஒரு மண்டலத்துக்கு துணை கலெக்டர் அந்தஸ்து நிலையில் உள்ள அதிகாரி தலைமையில் 14 குழுக்கள் தயார் நிலையில் உள்ளன.

மழை வெள்ளத்தால் பாதிக்கப்படும் மக்களை தங்க வைப்பதற்காக பள்ளிக்கூடம், சமுதாய கூடம் என 191 மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. அங்கு உணவு, குடிநீர், கழிப்பறை போன்ற வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இது தவிர 28 புயல் பாதுகாப்பு மையங்கள், 14 பல்நோக்கு தங்கும் மையங்களும் தயார் நிலையில் உள்ளன.

பொதுமக்களுக்கு வழங்குவதற்கு 45 நாட்களுக்கு தேவையான உணவுகள் இருப்பில் வைக்கப்பட்டுள்ளன. அவசர சிகிச்சை மேற்கொள்வதற்காக 13 மருத்துவ குழுக்களும் தயார் நிலையில் உள்ளன. பருவமழையை பொறுத்தவரை அனைத்து முன்னேற்பாடுகளையும் மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது கடலூர் சப்–கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ், பொதுப்பணித்துறை உதவி செய்பொறியாளர் கோவிந்தராஜன், குமரேசன், உதவி பொறியாளர் தாமோதரன், தாசில்தார் பாலமுருகன் ஆகியோர் உடன் இருந்தனர்.

இதைத் தொடர்ந்து சிதம்பரத்துக்கு புறப்பட்டு சென்ற கலெக்டர் அங்குள்ள கான்சாகிப்வாய்க்காலை பார்வையிட்டார். தொடர்ந்து இந்திராநகர், ஓமகுளம், அம்மாபேட்டை ஆகிய இடங்களையும் கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே பார்வையிட்டார். அப்போது சிதம்பரம் தொகுதி எம்.எல்.ஏ. பாண்டியன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

பின்னர் பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் மழை, வெள்ளம் குறித்த தகவல்களை அதிகாரிகளிடம் கலெக்டர் கேட்டு தெரிந்துகொண்டார்.


Next Story