நாமக்கல் பஸ் நிலையத்தில் கடையின் மேற்கூரை சிமெண்டு பூச்சு பெயர்ந்து விழுந்தது


நாமக்கல் பஸ் நிலையத்தில் கடையின் மேற்கூரை சிமெண்டு பூச்சு பெயர்ந்து விழுந்தது
x
தினத்தந்தி 1 Nov 2017 11:00 PM GMT (Updated: 1 Nov 2017 9:14 PM GMT)

நாமக்கல் பஸ் நிலையத்தில் கடையின் மேற்கூரையில் பூசப்பட்டு இருந்த சிமெண்டு பூச்சு பெயர்ந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் அதிர்ஷ்டவசமாக பொதுமக்கள் காயமின்றி உயிர் தப்பினர்.

நாமக்கல்,

நாமக்கல் நகராட்சி சார்பில் பஸ் நிலையத்தில் 100-க்கும் மேற்பட்ட கடைகள் கட்டி வாடகைக்கு விடப்பட்டு உள்ளன. இந்த கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆவதால், தற்போது பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக கட்டிடத்தின் மேல்பகுதியில் மழைநீர் தேங்கும் பகுதியை கண்டறிந்து, அவை தேங்காதவாறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதில் கடை எண் 13-ஐ செல்வராஜ் என்பவர் லீசுக்கு எடுத்து பேக்கரி மற்றும் பழச்சாறு கடை நடத்தி வருகிறார். இந்த கடையின் மேல் பகுதியில் மழைநீர் தேங்குவதை தடுக்க பராமரிப்பு பணி நேற்று மேற்கொள்ளப்பட்டது.

அப்போது கடையின் உள் புறமாக மேற்கூரையில் பூசப்பட்டு இருந்த சிமெண்டு பூச்சு திடீரென பெயர்ந்து கடைக்குள் விழுந்தது. கடையில் இருந்த தொழிலாளர்கள் சற்று விலகி நின்றதாலும், பொதுமக்கள் யாரும் கடைக்கு வராத காரணத்தாலும் இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ஆனால் கடையில் இருந்த பொருட்களின் மீது சிமெண்டு பூச்சு விழுந்ததால் அவை சேதம் அடைந்தன.

இதுகுறித்து நகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, நாமக்கல் பஸ் நிலையம் மற்றும் அதில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான கடைகள் பராமரிப்பு பணிக்கு ரூ.9 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இந்த பணியின்போது ஒரு கடையில் சிமெண்டு பூச்சு பெயர்ந்து விழுந்து உள்ளது. நாங்கள் ஏற்கனவே அனைத்து கடைக்காரர்களுக்கும் கடையின் மேற்கூரை ஸ்திரமாக உள்ளதா? என சரிபார்த்து கொள்ளவேண்டும் என அறிவுறுத்தி உள்ளோம். பஸ் நிலையத்தில் மீதமுள்ள பகுதிகளில் பராமரிப்பு பணி நடந்து வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர். 

Related Tags :
Next Story