போர்க்கால அடிப்படையில் மழை நிவாரண நடவடிக்கைகள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி


போர்க்கால அடிப்படையில் மழை நிவாரண நடவடிக்கைகள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
x
தினத்தந்தி 2 Nov 2017 4:45 AM IST (Updated: 2 Nov 2017 12:19 PM IST)
t-max-icont-min-icon

மழை நிவாரண நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் நடைபெறுகின்றன என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

ஆலந்தூர்,

இரட்டை இலை சின்னம் தொடர்பாக டெல்லி தலைமை தேர்தல் ஆணையத்தில் நடைபெறும் விசாரணையில் கலந்துகொள்வதற்காக அமைச்சர் ஜெயக்குமார், சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி சென்றார். முன்னதாக அவர், நிருபர்களிடம் கூறியதாவது:–

இந்திய தேர்தல் ஆணையத்தில் இது இறுதி கட்ட விசாரணையாக இருக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. தேர்தல் ஆணையம் கூறியபடி பொதுக்குழு உறுப்பினர்களின் பிரமாண பத்திரங்கள், வீடியோ உள்ளிட்ட ஆதாரங்களை தாக்கல் செய்து உள்ளோம்.

இரட்டை இலை சின்னத்தை முடக்கி தி.மு.க.வின் எண்ணத்தை நிறைவேற்ற மு.க.ஸ்டாலினும், டி.டி.வி.தினகரனும் ஒப்பந்தம் போட்டு உள்ளனர். எத்தகைய தில்லு முல்லு செய்தாலும் விரைவில் தவிடு பொடியாகி முற்றுப்புள்ளி வைக்கப்படும்.

தினகரன் ஆதரவு 3 எம்.பி.க்கள் மீது கட்சிக்கு விரோதமாக செயல்பட்டதாக கூறி நடவடிக்கை எடுக்க மனு அளித்து உள்ளோம். அதுபற்றி பாராளுமன்ற மேலவை முடிவு செய்யும். சுனாமி, சென்னை வெள்ளத்தை உலக நாடுகள் பாராட்டும் விதமாக சமாளித்து வெற்றிகரமாக செயல்பட்டோம்.

ஒவ்வொரு மண்டலத்துக்கும் ஐ.ஏ.எஸ். அதிகாரி நியமிக்கப்பட்டு எல்லா வகையான நடவடிக்கைகளும் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது. மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை.

அமைச்சர் வேலுமணியின் கருத்து தவறாக புரிந்துகொள்ளப்பட்டு உள்ளது. வளர்ந்த நாடுகளில் கூட பெருமழை பெய்யும்போது பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. அதை நாம் வெற்றிகரமாக சமாளித்து வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் அவரிடம் கருணாநிதி–ராமதாஸ் சந்திப்பு கூட்டணியாக மாற வாய்ப்பு உள்ளதா? என்று நிருபர்கள் கேட்டதற்கு, ‘‘அரசியலில் எதுவும் நடக்கலாம்’’ என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.


Next Story