2 குழந்தைகளின் மரணத்துக்கு மின்துறையே காரணம்: மழைக்காலத்தை சமாளிக்க நடவடிக்கை எடுக்கவில்லை


2 குழந்தைகளின் மரணத்துக்கு மின்துறையே காரணம்: மழைக்காலத்தை சமாளிக்க நடவடிக்கை எடுக்கவில்லை
x
தினத்தந்தி 3 Nov 2017 4:30 AM IST (Updated: 3 Nov 2017 12:30 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் 2 குழந்தைகள் இறந்ததற்கு மின்துறையே காரணம் என்றும், மழைக்காலத்தை சமாளிக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்கவில்லை என்றும் ஜி.கே.வாசன் குற்றம் சாட்டியுள்ளார்.

தேனி,

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், தேனியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மழைக்காலத்தை சமாளிக்கக்கூடிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு முறையாக எடுத்து இருக்க வேண்டும். தகுந்த முறையில் அதுபோன்ற நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்கவில்லை. 2, 3 நாட்கள் பெய்த மழையிலேயே சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அதிக சேதம் ஏற்பட்டுள்ளது. இதனை சரிசெய்வதற்கு தேவையான பணிகளை அரசு உடனடியாக தொடங்க வேண்டும்.

வரும் நாட்களில், பெய்யக்கூடிய மழையை சமாளிக்கும் வகையில் தமிழக அரசு செயல்பட வேண்டும். ஏழை, எளிய மக்களுக்கு நம்பிக்கை கொடுக்க வேண்டும். ஏற்கனவே மழையால் பாதிக்கப்பட்டு வீட்டுக்குள் தண்ணீர் புகுந்ததால், வெளியே வந்து இருக்கின்ற மக்களை பாதுகாப்பாக தங்கவைக்க அரசு இடம் கொடுக்க வேண்டும். உணவு கொடுக்க வேண்டும். மழை முழுவதுமாக நின்று, தண்ணீர் வடியும் வரை அவர்களின் பாதுகாப்புக்கு அரசு உத்திரவாதம் கொடுக்க வேண்டும்.

சென்னையில் மிகுந்த வருத்தத்துக்கு உரிய சோகமாக ஒரு அசம்பாவிதம் நடந்தது. 2 குழந்தைகள் மின்கம்பியால் உயிரை இழந்த நிலை ஏற்பட்டு உள்ளது. அதற்கு, மின்துறையின் அஜாக்கிரதை தான் காரணம். மின்கசிவால் இறந்து போன 2 குழந்தைகளின் குடும்பத்துக்கு அரசு கொடுத்த தொகை போதுமானதாக இல்லை. அவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் கொடுக்க வேண்டும்.

ரேஷன் சர்க்கரை விலையை அரசு உடனே குறைக்க வேண்டும். மத்திய அரசும் சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை தொடர்ந்து ஏற்றி கொண்டு இருக்கிறது. ஏழை மக்கள் மட்டும் இன்றி நடுத்தர மக்களாலும் இந்த விலை ஏற்றத்தை தாங்க முடியாது. அந்த சுமையை மத்திய அரசு குறைக்க வேண்டும்.

வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்யும் என்று 10 நாட்களுக்கு முன்பே அறிவித்து, மழை பெய்யத் தொடங்கி உள்ளது. இப்படி இருக்கும் சூழ்நிலையில் தமிழக அரசு மக்களை மழையில் இருந்து பாதுகாக்கக்கூடிய நிலையை எடுத்து, அனைத்து மாவட்டங்களிலும் அதிகாரிகள் குழுக்களை ஏற்படுத்தி, மழையில் இருந்து மக்களை மீட்க அவசர, அத்தியாவசிய பணிகளை உடனே செய்ய வேண்டும். அமைச்சர்கள் தங்களின் மாவட்டத்துக்கு சென்று மழையின் தாக்கத்தை ஆய்வு செய்து, மக்களுக்கு நிவாரணம் கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Related Tags :
Next Story