கோவையில் 2 ரெயில்கள் மீது கல்வீச்சு; மூதாட்டி காயம்


கோவையில் 2 ரெயில்கள் மீது கல்வீச்சு; மூதாட்டி காயம்
x
தினத்தந்தி 3 Nov 2017 3:30 AM IST (Updated: 3 Nov 2017 1:11 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் இரவில் 2 ரெயில்கள் மீது கல் வீசப்பட்டது. இதில் ஒரு பெண் காயம் அடைந்தார்.

கோவை,

கோவையில் இரவு நேரங்களில் ரெயில்கள் மீது கல்வீசும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவை பீளமேட்டில் இரவு நேரத்தில் கல்வீசியதில் ரெயில் என்ஜின் முகப்பு விளக்கு கண்ணாடி உடைந்தது. இது தொடர்பாக கோவை ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த நிலையில் கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து யஷ்வந்த்பூருக்கு செல்லும் ரெயில் நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் வடகோவை அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த ரெயில் பெட்டி மீது யாரோ மர்ம ஆசாமிகள் திடீரென்று கல் வீசினார்கள். ஆனால் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

இது போல் திருச்சியில் இருந்து பாலக்காடு செல்லும் பயணிகள் ரெயில் நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் கோவையை அடுத்த பீளமேடு அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது யாரோ மர்ம ஆசாமிகள் அந்த ரெயில் மீது கல்வீசினார்கள். இதில் அந்த ரெயிலில் பயணம் செய்த தஞ்சாவூர் அருகே உள்ள உக்கரைகுடில் பகுதியை சேர்ந்த செல்லம்மாள்(வயது 80) என்பவர் காயம் அடைந்தார்.

அவரை சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு செல்லம்மாளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவங்கள் குறித்து கோவை ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story