வாடகை உயர்வை கண்டித்து ஊட்டியில் கடையடைப்பு
வாடகை உயர்வை கண்டித்து ஊட்டியில் நேற்று கடையடைப்பு நடைபெற்றது. இதனால் சுற்றுலா பயணிகள் அவதி அடைந்தனர். ரூ.9 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டது.
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் ஆங்கிலேயர் காலத்தில் இருந்து ஊட்டி நகரில் மார்க்கெட் இயங்கி வருகிறது. நகராட்சிக்கு சொந்தமான இந்த மார்க்கெட்டில் மாவட்டம் முழுவதும் விளையக்கூடிய மலைக்காய்கறிகள் ஏலத்துக்கு கொண்டு வரப்படுகிறது. மேலும் கடைகளுக்கு காய்கறிகள் விற்பனை செய்யப்படுகின்றன. நகராட்சிக்கு சொந்தமான வணிக வளாகங்கள் பல்வேறு இடங்களில் இயங்கி வருகின்றன.ஊட்டி நகராட்சி மின் கட்டண பாக்கி செலுத்த முடியாமலும், அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க முடியாமலும் நிதி பற்றாக்குறையில் உள்ளது. அதன் காரணமாக பல்வேறு வளர்ச்சி பணிகள் செயல்படுத்த முடியாமலும், நிறைவடையாமலும் உள்ளன.
நகராட்சிக்கு வருவாயை அதிகரிக்க கடந்த ஆண்டு நகராட்சி நிர்வாகத்தால், ஊட்டியில் நகராட்சிக்கு சொந்தமான கடைகளுக்கு வாடகை உயர்த்தப்பட்டது. நகராட்சி கடைகளுக்கு வாடகை அதிகமாக உயர்த்தப்பட்டதாக கூறி, வியாபாரிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். வியாபாரிகள் உயர்த்தப்பட்ட வாடகையை கொடுக்கவில்லை. இதன் காரணமாக சுமார் ரூ.12 கோடி வாடகை பாக்கி உள்ளது. இதை வசூலிக்க முடியாமல் நகராட்சி திணறி வருகிறது.
இதற்கிடையே முன்னாள் நகராட்சி கமிஷனர் (பொறுப்பு) பிரபாகர் நகராட்சி கடைகளை ஏலம் விடுவதற்கான அறிவிப்பை வெளியிட்டார். இதுதொடர்பாக வியாபாரிகள் அரசுக்கு மேல்முறையீடு செய்தனர். தொடர்ந்து அது சம்பந்தமான முடிவை அரசு எடுக்காத காரணத்தினால், தற்போது நகராட்சி கமிஷனர் (பொறுப்பு) ரவி கடந்த சில நாட்களாக ஒவ்வொரு கடை, கடையாக சென்று உயர்த்தப்பட்ட வாடகையை வசூலிக்கும் பணியில் ஈடுபட்டார். இதன் காரணமாக ரூ.35 லட்சம் வாடகை வசூலானது.இந்த நிலையில், ஊட்டி நகர வியாபாரிகள் சங்கம் சார்பில், நகராட்சி கடை வாடகை உயர்வை கண்டித்தும், வாடகை கட்டணத்தை குறைக்கக்கோரியும் நேற்று ஊட்டியில் கடையடைப்பு நடைபெற்றது. இதனால் நகராட்சி மார்க்கெட் மற்றும் வணிக வளாகங்களில் உள்ள காய்கறி, இறைச்சி, துணிக்கடை, ஓட்டல், மருந்து கடை மற்றும் பழக்கடைகள் மூடப்பட்டன. அதன் காரணமாக ஊட்டி நகராட்சி மார்க்கெட் வளாகத்தில் ஆட்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.
ஊட்டி புறநகர் பகுதிகளான பிங்கர்போஸ்ட், தலைகுந்தா, லவ்டேல், பெர்ன்ஹில் ஆகிய பகுதிகளிலும் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. ஊட்டி நகர வியாபாரிகளின் கடையடைப்புக்கு ஆதரவு தெரிவித்து, ஊட்டி நகரம் மற்றும் புறநகரத்தில் உள்ள ஓட்டல்கள், உணவகங்கள் மற்றும் பேக்கரிகள் மூடப்பட்டன.ஊட்டியில் நடைபெற்ற முழு கடையடைப்பால், ஊட்டிக்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள் அவதி அடைந்தனர்.