லாரி டிரைவரை அடித்து கொல்வதை வேடிக்கை பார்த்த 2 போலீஸ்காரர்கள் பணி இடைநீக்கம்
லாரி டிரைவரை கும்பல் அடித்து கொல்வதை வேடிக்கை பார்த்த 2 போலீஸ்காரர்கள் அதிரடியாக பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
தானே,
லாரி டிரைவரை கும்பல் அடித்து கொல்வதை வேடிக்கை பார்த்த 2 போலீஸ்காரர்கள் அதிரடியாக பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
அடித்துக்கொலைதானே மாவட்டம் கல்யாண் நெவாலி பகுதியில் கடந்த 26–ந்தேதி சந்திரேஷ் என்ற லாரி டிரைவர் நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது அவருக்கும், அதே பகுதியை சேர்ந்த கடைக்காரர் ஒருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில், ஆத்திரமடைந்த லாரி டிரைவர் கடைக்காரரை அடித்தார். பதிலுக்கு கடைக்காரரும் அவரை திருப்பி தாக்கினார்.
இந்தநிலையில் தகவல் அறிந்து மான்பாடா போலீஸ் நிலையத்தை சேர்ந்த போலீஸ்காரர்கள் காச்வே, கபுதுலே ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். போலீசாரை பார்த்ததும் லாரி டிரைவர் சந்திரேஷ் அங்கு இருந்து தப்பி ஓடமுயன்றார். அப்போது, கடைக்காரருக்கு ஆதரவாக வந்த கும்பல் அவரை பிடித்து, அங்குள்ள மரத்தில் தலைகீழாக கட்டி தொங்கவிட்டு அடித்து உதைத்தது. இதில், படுகாயமடைந்த சந்திரேஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.
பணி இடைநீக்கம்இந்த சம்பவத்தின் போது போலீஸ்காரர்கள் 2 பேரும் லாரி டிரைவரை கும்பலிடம் இருந்து மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லாமல் வேடிக்கை பார்த்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தை படம் பிடித்த சிலர் சமூக வலைதளத்தில் பரப்பினர். இந்தநிலையில் கும்பல் லாரி டிரைவரை தாக்கியபோது வேடிக்கை பார்த்த 2 போலீஸ்காரர்களும் அதிரடியாக பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
லாரி டிரைவரை அடித்து கொன்ற சம்பவம் தொடர்பாக ஏற்கனவே அமித், சாகர், பலராம் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.