செம்பூரில் வினோதம் கோவிலுக்கு மதுபானம் படைக்கும் பக்தர்கள்
மும்பை செம்பூரில் உள்ள பாபா பைரவநாதர் கோவிலுக்கு பக்தர்கள் சாராயம் படைத்து வழிபடுகின்றனர்.
மும்பை,
மும்பை செம்பூரில் உள்ள பாபா பைரவநாதர் கோவிலுக்கு பக்தர்கள் சாராயம் படைத்து வழிபடுகின்றனர்.
பாபா பைரவநாதர் கோவில்மும்பை செம்பூரில் 40 ஆண்டுகால பழமைவாய்ந்த பாபா பைரவநாதர் கோவில் அமைந்துள்ளது. பொதுவாக கோவில்களில் சாமி சிலைகளுக்கு மலர்மாலை, பூ, தேங்காய் மற்றும் தங்கநகைகள் அல்லது ரொக்கப்பணம் காணிக்கையாக செலுத்தப்படுவது வழக்கம்.
ஆனால், இந்த பைரவநாதர் கோவிலில் மிகவும் வித்தியாசமாக, மதுபானங்களை படைத்து பக்தர்கள் வழிபடுகின்றனர். ஆண்டுதோறும் நவம்பர் மாதம் தொடக்கத்தில் வரும் கார்த்திகை ஏகாதசி தினத்தன்று இவ்வாறு வினோத படையலை பக்தர்கள் செலுத்துகின்றனர்.
இதுபற்றி, கோவில் நிர்வாகி ரமேஷ் லோகனே என்பவரிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:–
புராண குறிப்புகள்இந்தியா– பாகிஸ்தான் பிரிவினையின் போது, என்னுடைய மாமா தன் குடும்பத்தினருடன் பாகிஸ்தானில் இருந்து புலம்பெயர்ந்து செம்பூர் வந்து இருப்பிடம் ஏற்படுத்தி கொண்டார். அதோடு, இந்த கோவிலையும் அவர் தான் உருவாக்கினார்.
கார்த்திகை ஏகாதசி என்பது எங்களுக்கு மிகவும் புனிதமான ஒரு நாள். இந்த நாளுக்காக ஆண்டு முழுவதும் நாங்கள் காத்திருப்போம். இந்த நாளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள், பைரவநாதர் கோவிலில் கூடி, மதுபானத்தை சாமிக்கு படைப்பார்கள்.
இந்தியாவில், கடவுள்களை சாந்தப்படுத்த மதுபானம் படைப்பது தனித்துவமான நிகழ்வு அல்ல. புராணங்களில் இதுபற்றி ஏராளமான குறிப்புகள் காணப்படுகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.
எம்.எல்.ஏ. பேட்டிஉள்ளூர் எம்.எல்.ஏ. பிரகாஷ் பாதர்பெக்கர் கூறும்போது, ‘‘நான் பைரவநாதரின் தீவிர பக்தன். நான் இந்த கோவிலுக்கு வரும்போதெல்லாம், என்னுடைய வேண்டுதல்களை அவர் நிறைவேற்றுவார். ஆகையால், இந்த கோவிலின் மேம்பாட்டுக்கு ஆகும் செலவை என்னுடைய சொந்த பாக்கெட்டில் இருந்து கொடுக்கிறேன்’’ என்றார்.